/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்த மழை திணறும் சென்னை!
/
நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்த மழை திணறும் சென்னை!
நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்த மழை திணறும் சென்னை!
நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்த மழை திணறும் சென்னை!
UPDATED : ஜூன் 19, 2024 06:46 AM
ADDED : ஜூன் 19, 2024 12:05 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இரண்டு மணி நேரம் பெய்த பலத்த மழையில், நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வேளச்சேரி ரயில்வே பாதையில் தண்ணீர் தேங்கி, 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதாகின. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று இரவும் திடீர் கன மழை பெய்தது.
வேளச்சேரி, தரமணி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலையில் ஓடிய மழைநீரால், சோழிங்கநல்லுார் சாலையில் மெட்ரோ பணிக்காக தோண்டிய பள்ளத்தில் அரிப்பு ஏற்பட்டு பெரிதாக மாறியது. இதனால், அத்தடத்தில் நேற்று காலை பயணித்த வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் அதிகமானது.
வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை முழுதும் வெள்ளம் தேங்கியது. நேற்று அதிகாலை அவ்வழியே வாகனங்களில் சென்றோர், சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் சிக்கினர். இதில், 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஐந்து கார்கள் சிக்கி, 'ஆப்' ஆகி நின்றன.
அதேபோல், வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் அணுகு சாலையில் தேங்கியது.
இதனால், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், மடிப்பாக்கம் பகுதியில் இருந்து, கைவேலி வழியாக பள்ளிக்கரணை நோக்கி சென்ற வாகனங்கள், 1 கி.மீ., துாரம் வரை அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு புறப்பட்ட மாணவ - மாணவியர், வேலை, மருத்துவமனை என அவசரமாக புறப்பட்டோர், நடுவழியில் பரிதவித்தனர்.
குளமான சாலைகள்
வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 145வது வார்டு திரு.வி.க., தெருவில், மழைநீர் நேற்று காலை வரை வடியாமல் குளம் போல் தேங்கி நின்றது. இந்த வார்டில், 60க்கும் மேற்பட்ட சாலைகளில் வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் வடிவதில் சிக்கல் உள்ளது.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் மழைநீர் தேங்குவது வாடிக்கை. எனவே, இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு ஜெய் நகர் ஆறாவது தெருவிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது. இந்த மழைநீருடன் கழிவுநீர் கலந்து பாதசாரிகள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கோடம்பாக்கம் மண்டலம், ரயில்வே பார்டர் சாலையில் உள்ள மேற்கு மாம்பலம் சந்தையில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால், சந்தைக்கு காய்கறி வாங்க வந்த வியாபாரிகள் அவதிப்பட்டனர்.
பள்ளியில் தேக்கம்
பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால், வகுப்பறைக்கு செல்லவும், மைதானத்தில் விளையாட முடியாமலும், மாணவர்கள் சிரமப்பட்டனர்.
பள்ளி வளாகத்தில், மழைநீர் வெளியேற போதிய வடிகால்வாய் இல்லை. இதனால், ஒரு நாள் மழை பெய்தால்கூட குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு வழக்கமாக நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கும் என்பதால், கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழைநீர் வெளியேற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் தெரிவித்தனர்.
அரச மரம் சாய்ந்தது
ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத அரச மரம் இருந்தது. நள்ளிரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், அதிகாலை 2:30 மணியளவில் அரச மரம் முறிந்து விழுந்தது. மரம் விழுந்த இடத்தில் யாரும் இல்லாததால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். இதனால், காலையில் நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்ல சில மணி நேரம் சிரமப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு செம்பரம்பாக்கத்தில் 7.3 செ.மீ., மழை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு 645 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியின் கொள்ளளவு 1.622ல் இருந்து 1.666 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவும் பலத்த மழை பெய்தது.
- நமது நிருபர் குழு -