/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலப்பாக்கம் ஏரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
/
ஆலப்பாக்கம் ஏரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
ஆலப்பாக்கம் ஏரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
ஆலப்பாக்கம் ஏரியில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
ADDED : ஏப் 25, 2024 12:37 AM

மதுரவாயல், மதுரவாயல் ஆலப்பாக்கம் ஏரியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை அகற்ற, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், ஆலப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி, 70 ஆண்டுகளுக்கு முன், 140 ஏக்கர் பரப்பளவில் இருந்துள்ளது.
ஆலப்பாக்கம் ஏரி நீரை பயன்படுத்தி, இப்பகுதி மக்கள் விவசாயம் செய்துள்ளனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையையும், இந்த ஏரி பூர்த்தி செய்து வந்துள்ளது.
தொடர்ந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களால், 90 சதவீதம் வரை ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. தற்போது, வெறும் 5 ஏக்கராக ஏரி சுருங்கி விட்டது.
ஆக்கிரமிப்பு குறித்து நம் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருவதால், 5 ஏக்கர் ஏரி தப்பித்து வருகிறது. இந்த ஏரி பராமரிப்பு, பொதுப்பணித் துறை வசம் உள்ளது.
காட்டுப்பாக்கம், நுாம்பல், தெள்ளியார் அகரம், செட்டியார் அகரம், வானகரம், சிவபூதம், மேட்டுக்குப்பம், ஓடமான் நகர், ஷேக்மானியம் ஆகிய பகுதிகளில் இருந்து, ஆலப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்துள்ளது.
ஆலப்பாக்கம் பிரதான சாலை -- கிருஷ்ணா நகர், முதலாவது பிரதான சாலை சந்திக்கும் இடத்தில், ஏரிக்கு ஒரு கலங்கல் இருந்தது. தற்போது, கால்வாய்கள் முற்றிலுமாக மாயமாகி உள்ளன.
ஆலப்பாக்கம் ஏரியை சுற்றிலும் ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவுக்கூடம், விளையாட்டு திடல் ஆகியவை கட்ட, கடந்த 2012 மார்ச் 29ம் தேதி நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கம்பி வேலி அமைக்கவும், மாநகராட்சி தீர்மானித்தது.
அப்போது, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து, மாநகராட்சி அதிகாரிகள் பெயரளவிற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, வேலி அமைத்தனர்.
தொடர்ந்து முறையான பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் வசமானது.
நிரம்பி வழிந்த ஏரி
கடந்த 2015 கனமழையின் போது, ஆலப்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற முடியாமல், 144, 146, 147, 148 ஆகிய வார்டுகள் மூழ்கின.
மழை ஓய்ந்தும் இந்த பகுதிகள், 10 நாட்களுக்கு மேல் நீரில் மிதந்தன. அதே நிலை கடந்த 2021ம் ஆண்டும் தொடர்ந்தது. அதன் பின்னும், ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவோ, கரையை பலப்படுத்தி ஏரியை ஆழப்படுத்தவோ, அதிகாரிகள் முன்வரவில்லை.
இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரித்தது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 2020 அக்டோபரில், பொதுப்பணித்துறை வசம் இருந்த ஏரியின் மிஞ்சிய பகுதியில், மாநகராட்சி சார்பாக, 10.5 கோடி ரூபாய் செலவில் துார் வாரி, கரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளின் போது, ஏரியோரம் உள்ள புது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விட்டு துார்வார வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் தெரிவித்ததுடன், அதற்கான ஒரு குழுவையும் அமைத்தது.
மீண்டும் ஆக்கிரமிப்பு
ஆனாலும், அதற்குப் பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தற்போது, 2020ம் ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், மீண்டும் 'ஷீட்' அடித்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, 146வது வார்டு தி.மு.க.,வினர் உறுதுணையாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்படும் சில 'கேன் வாட்டர்' நிறுவனங்கள், ஆழ்துளைக் கிணறு அமைத்து, தண்ணீரை திருடி விற்று வருகின்றன.
இதனால், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
எனவே, ஆலப்பாக்கம் ஏரியில் மீண்டும் முளைக்கும் ஆக்கிரமிப்புகளை, முறையாக கண்காணித்து அகற்ற வேண்டும். நிலத்தடி நீர் திருட்டையும் தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

