ADDED : ஜூலை 22, 2026 08:02 PM
சென்னை: காவேரி மருத்துவமனையில், பல துறை ரோபோட்டிக் அறுவை சிகிச்சைக்கு, ஒருங்கிணைந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை காவேரி மருத்துவ குழுமம், ‘காவேரி 3எக்ஸ் சென்னை’ என்ற ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்டத்தை, அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காவேரி மருத்துவமனை குழுமத்தின் செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் பேசியதாவது:
சென்னையில், காவேரி மருத்துவமனை மூன்று இடங்களில் அமைந்துள்ளது. இந்த மூன்று மருத்துவமனைகளில் உள்ள, ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்துள்ளோம். இதன் மூலம் விரிவான ரோபோட்டிக் சிகிச்சையை, நோயாளிகளால் பெற முடியும்.
இதில், குடல் இரைப்பை, புற்றுநோயியல், சிறுநீர் பாதையியல், மகப்பேறு, மகளிர் நோயியல், சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல துறை சிகிச்சைகளை பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நோயாளிக்கு சிகிச்சை போலந்து நாட்டைச் சேர்ந்த நோயாளி, சீரற்ற இதய துடிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், சிகிச்சையில் தீர்வு கிடைக்காத நிலையில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் தீப் சந்த் ராஜா தலைமையிலான டாக்டர்கள் சிகிச்சை அளித்து, சீரற்ற இதய துடிப்பு பிரச்னைக்கு தீர்வு அளித்துள்ளனர்.
