தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அதிகம்... செல்லாத ஓட்டு!

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அதிகம்... செல்லாத ஓட்டு!

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அதிகம்... செல்லாத ஓட்டு!


ADDED : மார் 23, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால், ஒவ்வொரு தேர்தலிலும் செல்லாத ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலிலும், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் செல்லாத ஓட்டுகள் அதிகரித்துள்ளன.

லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என, எந்த வகையான தேர்தல் பணி என்றாலும், அரசு ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.

ஓட்டுச்சாவடியில் கட்டுப்பாட்டு அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், மண்டல அலுவலர், நோடல் அலுவலர் என, பல்வேறு பணிகளை அரசு ஊழியர்களும், அரசு ஆசிரியர்களும் மேற்கொள்கின்றனர்.

அவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தேர்தல் நாளன்று பணியில் ஈடுபடும் காரணத்தால், தபால் ஓட்டு போட வேண்டியுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாகவே, தபால் ஓட்டு போடுவதற்கான உறுதிமொழி படிவம், ஓட்டுச்சீட்டு உள்ளிட்டவை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழி படிவம் மற்றும் ஓட்டுச்சீட்டில் வேட்பாளரை தேர்வு செய்து, தபால் ஓட்டு போடுகின்றனர்.

ஆனால், அரசு ஊழியர்கள் பலருக்கும் தபால் ஓட்டு கூட முறையாக போட தெரியாததால், ஒவ்வொரு தேர்தலிலும் நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்களின் ஓட்டு தள்ளுபடி செய்யப்பட்டு, செல்லாத ஓட்டுகளாக வீணாகி வருகின்றன.

தேர்தல் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என, மூன்று கட்ட பயிற்சி பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களது ஓட்டு பதிவை கூட சரிவர செய்யாததால், ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும், கடந்த முறை நுாற்றுக்கணக்கான ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகி உள்ளன.

தமிழகம் முழுதும் உள்ள 39 லோக்சபா தொகுதியிலும், ஏராளமான தபால் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகி உள்ளன. சென்னையின் மூன்று தொகுதியிலும், 1,177 அரசு ஊழியர்களின் ஓட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு, செல்லாதஓட்டுகளாகியுள்ளன.

அதேபோல, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளிலும் நுாற்றுக்கணக்கான ஓட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:

அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதில் முறையான வழிமுறைகளை பின்பற்றுவதில்லை.

தேர்தல் கமிஷன் கூறும் விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். ஓட்டுச்சீட்டில் வேட்பாளர் அருகில், 'டிக்' மட்டுமே அடிக்க வேண்டும். ஆனால், சிலர் வட்டமிட்டு காண்பிப்பர். அதனுடன் கையெழுத்தும் போட்டுவிடுவர். இதுபோன்ற தவறுகளால் ஓட்டு செல்லாமல் போய்விடும்.

அதேபோல் உறுதிமொழி படிவத்தை முறையாக நிரப்ப வேண்டும். அவற்றையும் முழுமையாக நிரப்பாமல், அவற்றை இணைக்காமலும் விட்டு விடுவர். கெசட்டட் ஆபீசர் ஒருவரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்; அதையும் சரிபார்க்காமல் விடுவர்.

வேட்பாளரை தேர்வு செய்த பின், ஓட்டுச்சீட்டை தனி கவரில் உள்ளே வைத்து, தபால் ஓட்டு போட வேண்டும். ஆனால், ஒரே கவரில் உறுதிமொழி படிவத்தையும், ஓட்டுச்சீட்டையும் போட்டுவிடுவர். கவரை கிழிக்கும்போது ஓட்டுச்சீட்டும் கிழிந்துவிடும். இதனால், செல்லாத ஓட்டுகளாகின்றன.

தேர்தல் கமிஷன் விதிமுறைகளை சரியாக பின்பற்றினாலே, செல்லாத ஓட்டுகள் குறைந்துவிடும். அரசு ஊழியர்கள் கவனத்துடன் தபால் ஓட்டு போட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us