/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருக்குறள் கற்பிப்பது குற்றமா: -பா.ஜ., கேள்வி
/
திருக்குறள் கற்பிப்பது குற்றமா: -பா.ஜ., கேள்வி
ADDED : செப் 08, 2024 07:11 AM

சென்னை: 'தமிழகத்தில் திருக்குறள் கற்பிப்பது குற்றமா' என, பா.ஜ., மாநிலச் செயலர் அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை, அசோக் நகர் அரசு பள்ளியில் சொற்பொழிவாளர் ஒருவர், 'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' என்ற திருக்குறளுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட ஆசிரியர் ஒருவர், மறுபிறவி தத்துவம் குறித்து இங்கு பேசக்கூடாது என்று சர்ச்சைக்குரிய விதத்தில், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அதைத் தொடர்ந்து, அந்த சொற்பொழிவாளர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க., அரசின் இந்த நடவடிக்கை, தமிழகத்தில் திருக்குறள் போதிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
அறத்துப்பால் முழுதும் பல இடங்களில் மறுபிறவி தத்துவங்களை திருவள்ளுவர் பேசுகிறார். 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்' என்கிறார். 'எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்' என்கிறார்.
அதற்காக மறுபிறவி தத்துவத்தை போதிக்கிற திருக்குறளை பாடநுால்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று, நாளை யாரும் வற்புறுத்தினால் அவர்கள் குரலுக்கு தி.மு.க., அரசு செவி சாய்த்து, திருக்குறளை பாடநுால்களில் இருந்து நீக்குமா? அதை நோக்கித்தான் தி.மு.க., அரசு செல்கிறதா?
திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலம் என்று சொன்ன ஈ.வெ.ரா.,வின் கருத்தில் தி.மு.க., உடன்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட சொற்பொழிவாளரை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கர் என்பவரின் இயற்பெயர் அந்தோணி பர்ணாந்து என தகவல் பரவி இருக்கிறது.
அப்படியென்றால், அவர் மதரீதியில் தான், சொற்பொழிவாளரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளாரோ என சந்தேகம் எழுகிறது.
அதனால், போலீசார் இந்த கோணத்திலும் பிரச்னை குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட ஆசிரியர் அப்படிப்பட்ட எண்ணத்தோடு செயல்பட்டிருந்தால், விசாரணைக்குப் பின் அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.