/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகரிக்கும் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்துவது சாத்தியமா?
/
அதிகரிக்கும் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்துவது சாத்தியமா?
அதிகரிக்கும் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்துவது சாத்தியமா?
அதிகரிக்கும் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்துவது சாத்தியமா?
ADDED : ஆக 05, 2024 01:17 AM

சென்னை, ''சென்னையில் அதிகரித்து வரும் நவீன முறையில் பிச்சை எடுப்போரை, மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கூறினார்.
சென்னையின் பிரதான சாலை சிக்னல்கள், கோவில்கள், ரயில் நிலையங்களில், சமீப காலமாக பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரூ.10 வசூல்
முதியோர், பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், தங்களது வாழ்வாதாரத்திற்காக மற்றவர்களிடம் தானம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுடன், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்தோர், பிரதான சாலை சிக்னல்களில் நவீன முறையில் பிச்சை எடுப்பதும் அதிகரித்து வருகிறது.
இவர்கள் ஒரு கூட்டாக இருந்தாலும், வெவ்வேறு முறைகளை பின்பற்றி பிச்சை எடுக்கின்றனர்.
குறிப்பாக, குழந்தைகளை மடியில் கட்டிக்கொண்டு, பிச்சை எடுத்தல், பேனா, காது குடையும் 'பட்ஸ்' போன்ற பொருட்களை வைத்து, 10 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு மேல் பெறுதல், சாலை சிக்னல்களில் நிற்கும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடியை உரிமையாளர் அனுமதியில்லாமல் சுத்தம் செய்து, அவரிடம் 20 ரூபாய்கு மேல் பெறுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அண்ணா சாலை, அண்ணா நகர், அடையாறு, திருவான்மியூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நவீன முறையில் பிச்சை எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த, 1972ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தினார்.
இத்திட்டத்தில், பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு, அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டது.
இதுபோன்ற மையங்கள், தமிழகத்தில் ஆறு இடங்களில் செயல்பட்டன. நாளடைவில், அம்மையங்களின் செயல்பாடு முடங்கியதால், மீண்டும் பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர்.
மறுவாழ்வு திட்டம்
இந்நிலையில், சென்னையில் அதிகரித்து உள்ள பிச்சைக்காரர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தர வேண்டும் என, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பலர் கோரிக்கை வைத்தனர்.
குறிப்பாக, கருணாநிதி ஆட்சியில் செயல்பட்டதுபோல், மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தி, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது:
சாலை சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுப்போரை மீட்டு, மாநகராட்சியின் இரவு நேர காப்பகங்களில் தங்க வைத்தாலும், சிலர் மட்டுமே தங்குகின்றனர்.
பலரிடம் நான் நேரடியாக பேசியுள்ளேன். அவர்களுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தகுதிக்கு ஏற்ப, பணி வழங்குவதாக கூறினாலும், அவர்கள் தங்களுக்கு இப்படி இருப்பது தான் பிடித்திருக்கிறது என்கின்றனர்.
அவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்க வேண்டும். எனவே, அதிகாரிகள் மற்றும் அரசிடம் பேசி, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அவை, விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.