/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் மாடவீதியா... 'பார்க்கிங்' ஏரியாவா? 'மினி ஹால்'களால் வடபழனியில் அவஸ்தை
/
கோவில் மாடவீதியா... 'பார்க்கிங்' ஏரியாவா? 'மினி ஹால்'களால் வடபழனியில் அவஸ்தை
கோவில் மாடவீதியா... 'பார்க்கிங்' ஏரியாவா? 'மினி ஹால்'களால் வடபழனியில் அவஸ்தை
கோவில் மாடவீதியா... 'பார்க்கிங்' ஏரியாவா? 'மினி ஹால்'களால் வடபழனியில் அவஸ்தை
ADDED : ஜூன் 20, 2024 12:34 AM

வடபழனி,
சென்னையில் பிரசித்தி பெற்ற நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆற்காடு சாலையில் இருந்து, ஆண்டவர் கோவில் முகப்பு பகுதியை ஆண்டவர் தெரு இணைக்கிறது.
மினி ஹால்கள்
இந்த தெருவின் இருபுறமும், நடைபாதை மட்டுமல்லாது சாலையும் சிறு சிறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே முடியாத நிலை ஏற்படுகிறது.
இதேபோல், கோவிலை சுற்றி உள்ள மாடவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், அகலமாக இருந்த மாடவீதிகள் காலப்போக்கில், ஆக்கிரமிப்பால், 10 -- 12 அடி சாலையாக சுருங்கிஉள்ளன.
இதுமட்டுமல்லாமல், மாடவீதிகளில் மினி ஹால்கள் அதிகரித்துள்ளன. இந்த மினி ஹால்கள், மாநகராட்சியிடம் எந்த முறையான அனுமதியும் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. மேலும், வணிக கட்டடத்திற்கான வரியை கட்டிவிட்டு, திருமண மண்டபங்களாக செயல்படுகின்றன.
இடையூறு
அதுமட்டுமல்லாமல், போதிய பார்க்கிங் மற்றும் இட வசதியின்றி குறுகலான இடத்தில், இந்த மினி ஹால்கள் செயல்படுகின்றன. திருமண மண்டபத்திற்கான எந்த நிபந்தனைகளையும் இவர்கள் பின்பற்றுவதில்லை.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின்போது, இப்பகுதியில் கூட்டம் அலைமோதும். இதனால், சாலை மேலும் குறுகி விடுகிறது. இதனால், அவரச உயிர் காப்பு சேவை வாகனங்களான, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வரமுடியாத நிலை உள்ளது.
அதேபோல், இக்கோவில் குளத்தை சுற்றி உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், தங்கள் கார்களை குளத்தை சுற்றி நிறுத்துகின்றனர். மேலும், பைக் மற்றும் கார் மெக்கானிக் கடைக்காரர்களும் தங்களிடம் பழுது பார்க்க வரும் வாகனங்களையும், குளத்தை சுற்றி நிறுத்துகின்றனர்.
இது, விஷேச நாட்கள் மற்றும் திருவிழாக்களின்போது, சுவாமி புறப்பாட்டிற்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது. இந்த வாகனங்களை அகற்ற, போக்குவரத்து துறை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, வடபழனி கோவிலை சுற்றி உள்ள மினி ஹால்களை முறைப்படுத்த வேண்டும். சென்னையில் மற்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போல், வடபழனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அப்புறப்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.