/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்வெட்டு திறந்து ரெண்டு வருஷமாச்சு... குடிநீர் கனெக் ஷன் எப்போ தருவீங்க?
/
கல்வெட்டு திறந்து ரெண்டு வருஷமாச்சு... குடிநீர் கனெக் ஷன் எப்போ தருவீங்க?
கல்வெட்டு திறந்து ரெண்டு வருஷமாச்சு... குடிநீர் கனெக் ஷன் எப்போ தருவீங்க?
கல்வெட்டு திறந்து ரெண்டு வருஷமாச்சு... குடிநீர் கனெக் ஷன் எப்போ தருவீங்க?
ADDED : ஜூன் 14, 2024 12:04 AM

நெமிலிச்சேரி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெமிலிச்சேரி ஊராட்சி. இங்குள்ள நாகாத்தம்மன் நகர், 3, 4வது வார்டுகளில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
அங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக, 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி, ஜல் ஜீவன் திட்டம் 2020 -- 21 திட்டத்தின் கீழ் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
மேலும், நெமிலிச்சேரி காலனி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் கொண்டு வர ஏதுவாக, 7,165 அடி துாரம் குழாய் புதைக்கப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் கடந்த 2022ல் முடிந்தன. இதையடுத்து, கடந்த 2022 ஏப்ரலில், முன்னாள் அமைச்சர் நாசர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்று வரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதனால், பகுதிவாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதே போல், கடந்த மூன்று ஆண்டுகளாக, நெமிலிச்சேரி 1, 2, 3, 4 மற்றும் 5வது வார்டுகளில் உள்ள 1,400 வீடுகளுக்கு உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 6 ம் தேதி, நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், 5.62 லட்சம் மதிப்பீட்டில், 1 மற்றும் 5வது வார்டுக்கு மட்டும், நல்ல தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள மூன்று வார்டுகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல், ஊராட்சி நிர்வாகம் அந்த பணிகளை கிடப்பில் போட்டுள்ளது.
எனவே, புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இணைப்பு வழங்கி, பொதுமக்களுக்கு குடிநீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும், உப்புத்தண்ணீர் பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காண வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
பல லட்சம் ரூபாய் செலவில், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி யாருக்கும் பயனின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
குடிநீர் தொட்டியை திறந்ததாக கல்வெட்டு மட்டும் வைத்துள்ளனர். ஆனால், குழாயில் தண்ணீர் வரவில்லை.
எனவே, பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் தலையிட்டு, மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

