ADDED : செப் 13, 2024 12:27 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த முரளி என்பவர் ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், தான் வாங்கிய புஞ்சை நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்ய 2012 மார்ச் 30ல் விண்ணப்பித்தார்.
அப்போது ஆவடி சார் - பதிவாளராக பணிபுரிந்த தமிழ்சுவை, 66, என்பவர் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 13,000 ரூபாயை, சார் - பதிவாளர் தமிழ்சுவை மற்றும் இளநிலை உதவியாளர் கோபிநாத், 50, ஆகியோரிடம், முரளி வழங்கினார்.
பணம் பெறும்போது, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. நேற்று திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி மோகன், ஓய்வு பெற்ற சார் - பதிவாளர் தமிழ்சுவை, தற்போது சைதாப்பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் கோபிநாத், 50, ஆகிய இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
சென்னை லஞ்ச போலீசார், இருவரையும், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.