/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு
/
ஆவடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு
ADDED : மே 01, 2024 12:26 AM
சென்னை, ஆவடி அருகே ஓடும் ரயிலில், அரசு பெண் ஊழியரிடம் பட்டா கத்தி காட்டி, 5 சவரன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் லோகோ பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி, 33. இவர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை பேச்சு பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 28 ம் தேதி காலை, குன்றத்தூரில் உள்ள தந்தை வீட்டிற்கு செல்ல, மின்சார ரயிலில் காயத்ரி குழந்தையுடன் பயணித்துள்ளார்.
அந்த ரயில் ஆவடி வரை செல்வதால், அண்ணனுார் ரயில் நிலையத்தில், மற்ற பயணியர் இறங்கி விட்டனர். மகளிர் பெட்டியில், குழந்தையுடன் காயத்ரி தனியாக பயணித்துள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், அதே பெட்டியில் ஏறியுள்ளார்.
அண்ணனூர் --- ஆவடி நிலையங்களுக்கு இடையே ரயில் சென்ற போது, பட்டா கத்தியை காட்டி, காயத்ரி அணிந்திருந்த நகையை கழற்றி தருமாறு மிரட்டி உள்ளார். காயத்ரி நகையை தர மறுத்ததால், மர்ம நபர் அவரை வெட்ட முயன்றுள்ளார்.
அதை சாமர்த்தியமாக தடுத்த காயத்ரி, மர்ம நபரை எட்டி உதைத்துள்ளார். கீழே விழுந்த மர்ம நபர், சுதாரித்து எழுந்து, காயத்ரி கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து, ஓடும் ரயிலில் குதித்து தப்பினார்.
காயத்ரி அளித்த புகாரின் படி, ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.