/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கதவணையாகும் வாயலுார் தடுப்பணை 2 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க திட்டம்
/
கதவணையாகும் வாயலுார் தடுப்பணை 2 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க திட்டம்
கதவணையாகும் வாயலுார் தடுப்பணை 2 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க திட்டம்
கதவணையாகும் வாயலுார் தடுப்பணை 2 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க திட்டம்
ADDED : செப் 06, 2024 12:42 AM
சென்னை, கர்நாடகா மாநிலம் நந்திமலையில், பாலாறு உற்பத்தியாகிறது. இது கர்நாடகாவில் 93 கி.மீ.,யும், ஆந்திராவில் 33 கி.மீ.,யும், தமிழகத்தில் 222 கி.மீ.,யும் பயணிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் வாயலுார் அருகே, வங்க கடலில் கலக்கிறது.
நீர்மட்டம் உயர்வு
இதன் வாயிலாக வேலுார், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.
பாலாற்றின் நீரை தடுக்கும் வகையில், ஆந்திராவில் பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. தடுப்பணைகளின் உயரம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில் பாயும் பாலாற்றில் நீரோட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. பாலாற்றில், தொடர்ச்சியாக மணலை அள்ளியதால், மேற்பரப்பு நீர்வளம் மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்கும் வகையில், பாலாற்றில் தடுப்பணை கட்ட, அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கிழக்கு கடற்கரை சாலையில், வாயலுார் அருகே, 32.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,050 மீட்டருக்கு தடுப்பணை கட்டப்பட்டது. இது 2019ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதில், 0.50 டி.எம்.சி., அளவிற்கு நீர் சேமிக்கப்பட்டு வருகிறது.
வறண்டு கிடந்த பாலாற்றில் நீர் தேங்குவதால், சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்டவற்றின் தேவையும் பூர்த்தியாகிறது. இந்நிலையில், வாயலுார் தடுப்பணையை கதவணையாக மாற்றுவதற்கு, நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாலைவனமாக இருந்த பாலாற்றில், வாயலுார் தடுப்பணையில் ஆண்டு முழுதும்நீர் தேங்கி நிற்கிறது.
நிலத்தடியில் 10 மீட்டர், மணல் பரப்பிற்கு மேலே 1.50 மீட்டர் உயரத்திற்கும் தடுப்பணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், பாலாற்றின் வழியாக 1.50 கி.மீ., வரை ஊடுருவிய கடல்நீர் பாதிப்பு குறைந்துள்ளது.
மதிப்பீடு தயாரிப்பு
நம் நாளிதழ் செய்திகளை சுட்டிக்காட்டி, அங்கு பணியில் இருந்த நீர்வளத்துறை பொறியாளர், அரசிடம் போராடி நிதி பெற்று, இப்பணியை திட்டமிட்டபடி செய்து முடித்தார்.
இந்த தடுப்பணை வழியாக ஆண்டுதோறும், 30 முதல் 35 டி.எம்.சி., வரையிலான நீர், வங்க கடலுக்கு செல்கிறது. இதில், 2 டி.எம்.சி., நீரை சேமித்து, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும்.
இதற்கு, தடுப்பணையின் உயரத்தை 3 மீட்டர் உயர்த்தி, கதவணை கட்ட, 250 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இப்பணியை முடித்தால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு செலவாகும் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.
அரசு நேரடி நிதியுதவி மட்டுமின்றி பன்னாட்டு வங்கிகள் நிதி ஆதாரத்தை திரட்டி பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.