/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரி ஆக்கிரமிப்பு: காஞ்சி கலெக்டருக்கு நோட்டீஸ்
/
ஏரி ஆக்கிரமிப்பு: காஞ்சி கலெக்டருக்கு நோட்டீஸ்
ADDED : ஆக 09, 2024 12:11 AM
சென்னை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் மூன்று ஆண்டுகளாக அகற்றப்படாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு, நீர்வளத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், காஞ்சிபுரம் கலெக்டர், தமிழக சதுப்பு நில ஆணையத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
'தாம்பரம் மாநகராட்சி, சிட்லபாக்கத்தில், நீர்வளத் துறைக்கு சொந்தமான, 102 ஏக்கர் பரப்புடைய ஏரி உள்ளது. ஆக்கிரமிப்புகளால் ஏரியின் அளவு பாதியாக சுருங்கி விட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மூன்று ஆண்டுகளாக சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை' என செய்தி வெளியானது.
அதில், 'இங்கு, 403 ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்ட நீர்வளத் துறை, 74 ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்றியுள்ளது. ஆனால், 330 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை' என கூறப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், டில்லியில் உள்ள தேசிய பசுமை தீரப்பாயத்தின் முதன்மை அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. இந்த வழக்கை, சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றியது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மூன்று ஆண்டுகளாக சிட்லப்பாக்கம் ஏரியின் பெரும்பான்மையான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது குறித்து, நீர்வளத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காஞ்சிபுரம் கலெக்டர், தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை, வரும் 30க்கு தள்ளிவைத்தனர்.