/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் சுரங்கப்பாதை பணியிடத்தில் மண்சரிவு
/
திருவொற்றியூர் சுரங்கப்பாதை பணியிடத்தில் மண்சரிவு
ADDED : ஆக 03, 2024 12:39 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், கிராமத்தெரு மற்றும் அண்ணாமலை நகரை இணைக்கும் வகையில், ரயில்வே தண்டவாளத்தின் கீழ், 1,230 அடி நீளம், 24.75 அடி அகலம் மற்றும் இருவழிப்பாதைகளுடன் கூடிய சுரங்கப்பாதை அமைய உள்ளது. இதற்கான பணிகள், 30 கோடி ரூபாய் செலவில் ஓராண்டிற்கு முன் துவங்கின.
இதன் காரணமாக, அவ்வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பாதசாரிகள் மற்றும் சைக்களில் செல்லும், மாணவ - மாணவியர் மட்டும் தண்டவாளத்தை கடந்து, சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தை ஒட்டிய, தற்காலிக சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பக்கவாட்டில் மணல் சரியாமல் இருக்க, இரும்பு தகரங்கள் பொருத்தப்பட்டு, மணலை எடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், நேற்று, ரயில்வே தண்டவாளம் பக்கம் இருந்த மண் சரிந்தது. தடுப்புகளும் சாய்ந்தன.
மேலும் மண் சரியாதபடி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. இருப்பினும், பக்கவாட்டில் மண் சரிந்ததால், தற்காலிக சாலையிலும் விரிசல் ஏற்பட்டது.
அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் கூறுகையில், ''சுரங்கப்பாதை பணிக்கு முன்பாக, மண் பரிசோதனை மேற்கொண்டதாக கூறுகின்றனர்.
இருப்பினும், இதுபோன்ற சம்பவம் ஏற்புடையதல்ல. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திட்டவரைவில் மாற்றம் கொண்டு வந்து, மாற்று தொழில்நுட்பம் வாயலிாக, மணல் சரியாத அளவில், சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.