ADDED : ஏப் 23, 2024 12:53 AM

செங்குன்றம்,வெள்ளானுார் ஊராட்சி வேல்டெக் சந்திப்பு முதல் மோரை ஊராட்சி, 'அயிட்டா' தொழிற்பேட்டை வரை, 6 கி.மீ., துாரத்திற்கு, ஆவடி- - அலமாதி பிரதான சாலை உள்ளது.
இந்த சாலையை 4,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். 10 ஆண்டுக்கு முன், இந்த சாலை அமைக்கப்பட்டது. அதன் பின் முறையாக பராமரிக்காததால், மிகவும் சிதிலமடைந்து, மலை கிராம சாலை போல மாறியது.
சாலையின் நடுவே திடீர் திடீர் என வரும் மெகா பள்ளங்களால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி ள்ளனர். பலரும் நிலைதடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர், முதுகு தண்டு வட பாதிப்பிற்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். குறிப்பாக, கர்ப்பிணியர், முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் நோயாளிகள், இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இரவில் நிலைமை மேலும் மோசமாக உள்ளது.
லோக்சபா வேட்பாளர்களை கூட, அவர் சார்ந்த கட்சியினர் ஆவடி- - அலமாதி சாலையில் அழைத்து செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, பாதிக்கப்படும் பொதுமக்கள், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் அளித்தது தான் மிச்சம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆவடி - அலமாதி பிரதான சாலையின் 'நடுவுல கொஞ்சம் சாலையை காணோம்' என்ற நிலைமை, வாகன ஓட்டிகளுக்கு வேதனையாக உள்ளது.

