/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிப்பறைக்கு பூட்டு மெரினாவில் கடும் அவதி
/
கழிப்பறைக்கு பூட்டு மெரினாவில் கடும் அவதி
ADDED : ஜூன் 03, 2024 02:35 AM

அண்ணாசதுக்கம்:மெரினாவில், பொதுக்கழிப்பறை ஊழியர்கள் திடீரென பூட்டிவிட்டுச் சென்றதால், பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும், பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் வசதிக்காக, சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி மற்றும் இலவச கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
நேற்று விடுமுறை நாள் என்பதால், மெரினா கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், கடற்கரையில் பொழுதை கழித்துவிட்டு வந்த பொதுமக்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில், சர்வீஸ் சாலையில் உள்ள பொது கழிப்பறை பூட்டப்பட்டிருந்ததால் மிகுந்த அவதியடைந்தனர்.
கழிப்பறையை திறக்க, ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால், பெண்கள் கடும் அவதியடைந்தனர்.
இது குறித்து, சுற்றுலா பயணியர் கூறியதாவது:
விடுமுறை நாளில் மெரினாவில் பொழுதை கழிக்க வந்தோம். பொதுக்கழிப்பறைக்குச் சென்றால், பூட்டிக் கிடக்கிறது. ஊழியர்கள் அங்கு யாரும் இல்லை.
இந்த கழிப்பறைக்கு அருகில், வேறு கழிப்பறை இல்லை. சற்று தொலைவு செல்ல வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இங்கு, கழிப்பறை பூட்டப்படுவது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.