/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லுாப் சாலையில் தினமும் நெரிசல் ஆக்கிரமிப்பு கடைகள் அடாவடி
/
லுாப் சாலையில் தினமும் நெரிசல் ஆக்கிரமிப்பு கடைகள் அடாவடி
லுாப் சாலையில் தினமும் நெரிசல் ஆக்கிரமிப்பு கடைகள் அடாவடி
லுாப் சாலையில் தினமும் நெரிசல் ஆக்கிரமிப்பு கடைகள் அடாவடி
ADDED : மே 16, 2024 12:55 AM

பட்டினப்பாக்கம், பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், குடைகளின் கீழ் செயல்படும் ஆக்கிரமிப்பு கடைகளால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தினமும் தொடரும் இந்த பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆக்கிரமிப்பு கடைகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், கடந்த ஆண்டிற்கு முன், சாலையோரம் ஏராளமான மீன் விற்பனைக் கடைகள் செயல்பட்டன.
விடுமுறை நாட்களில் மீன்கள் வாங்க, இந்த பகுதியில் அதிக அளவில் கூட்டம் கூடும்.
அப்போது, வாடிக்கையாளர்கள் தங்களின் கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை, சாலையில் ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் சென்றனர்.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின், போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள், மீன் விற்பனை கடைகளை அங்கிருந்து அகற்றினர்.
அவர்களுக்கு அதே பகுதியில், நவீன மீன் அங்காடி கட்டுப்பட்டுள்ளது. இதன் பின், சாலையை ஆக்கிரமித்து, மீன் உணவகங்கள் அதிக அளவில் வைக்கப்பட்டன.
100க்கும் மேற்பட்ட இந்த உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களை விருப்பம் போல் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தினர்.
இதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், இந்த ஆக்கிரமிப்பு கடைகளில், 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
இந்த பிரச்னை ஓய்வதற்குள், தற்போது மீண்டும் பட்டினப்பாக்கம் லுாப் சாலையை ஆக்கிரமித்து குடைகள் வைத்து, அதன் கீழ் மீன் விற்பனை மற்றும் மீன் உணவு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
மதியம் நேரத்தில், இந்த கடைகளில் கூட்டம் அதிகரிக்கிறது. வாடிக்கையாளர்களின் வாகனங்களும் வழக்கம் போல் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், காலையிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, போக்குவரத்திற்கு பிரச்னை இல்லாமல் வழிவகை செய்ய வேண்டும். போலீசாரும் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.