/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகன சோதனையில் சிக்கிய மலேஷிய கரன்சி, பாஸ்போர்ட்
/
வாகன சோதனையில் சிக்கிய மலேஷிய கரன்சி, பாஸ்போர்ட்
ADDED : மார் 24, 2024 01:02 AM

அம்பத்துார், சென்னை ஆவடி சட்டசபை தொகுதி கண்காணிப்பு குழுவினர், நேற்று அதிகாலை, 1:30 மணி அளவில், அம்பத்துார், சோழபுரம் பிரதான சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 'அமேஸ்' ரக சொகுசு காரை, சோதனைக்காக நிறுத்தினர். ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. அதையடுத்து, காரை விரட்டிப் பிடித்து சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட, 58,000 ரூபாய் மதிப்புள்ள மலேஷிய நாட்டு பணம், 13 மலேஷிய பாஸ்போர்ட், இரண்டு இந்திய பாஸ்போர்ட்கள் சிக்கின.
காரை ஓட்டி வந்த திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனி, ஆதி சங்கரி தெருவை சேர்ந்த ஜின்ஷோ, 41, என்பவரிடம் இது தொடர்பாக விசாரிக்கின்றனர்.
கொளத்துார், தில்லை நகர் முதல் பிரதான சாலையில் ராஜேந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வியாசர்பாடியை சேர்ந்த இளமாறன், 39, என்பவரின் மினி லாரியை சோதனையிட்ட போது, 1,03,200 ரூபாய் இருந்தது. காசிமேடில் மொத்தமாக மீன் வாங்கி வந்து சில்லரை வியாபாரம் செய்து வரும் இவர், வசூலான பணத்தை தகுந்த ஆவணமின்றி கொண்டு சென்ற போது சிக்கியுள்ளார். கைப்பற்றப்பட்ட பணம், பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பெரவள்ளூர் ஜவஹர் நகரில் நடந்த சோதனையில், லோகேஷ், 41, என்பவர் ஓட்டி வந்த டாடா ஏஸ் மினி வேனில் 93,310 ரூபாய் இருந்தது கண்டறிந்து கைப்பற்றப்பட்டது.
பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, பாலவாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் காரை மடக்கி சோதனை செய்தனர்.
இதில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற 73,000 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

