மூடு கால்வாய்க்குள் கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்க ‘மெட்ரோ’ முடிவு
மூடு கால்வாய்க்குள் கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்க ‘மெட்ரோ’ முடிவு
ADDED : ஜூன் 25, 2026 04:42 PM
சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுாரில் பெரிய கழிவுநீர் குழாயை மாற்றி அமைக்காமல், மூடு கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து, குழாயை மாற்றி அமைக்கும் செலவை ஏற்க மெட்ரோ ரயில் நிறுவனம் முன்வந்துள்ளதால், வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
தென்சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வடியும் மழைநீர், ஒக்கியம் மடு வழியாக 15 கி.மீ., பயணித்து துரைப்பாக்கம் அருகே பகிங்ஹாம் கால்வாயில் கலக்கும். இதனால், மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை இருந்தது.
வெள்ள அபாயத்தை தடுக்கவும், தண்ணீர் சீராக செல்லவும், சோழிங்கநல்லுார் – மேடவாக்கம் சாலையில் இருந்து, நேராக பகிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், 1.7 கி.மீ., நீளத்திற்கு மூடுகால்வாய் கட்டும் பணி, 2023ல் தொடங்கியது. மொத்தம் 10 அடி அகலம், 8 அடி உயரத்தில் கால்வாய் அமைக்க 47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மூடு கால்வாய் கட்டும் இடத்தில், 300 மீட்டர் நீளத்தில், 700 எம்.எம்., அளவு உடைய கழிவுநீர் குழாய் செல்கிறது.
இந்த குழாயை மாற்றி அமைத்த பின் மூடு கால்வாய் கட்ட வேண்டும். சோழிங்கநல்லுார் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், குழாயை யார் மாற்றி அமைப்பது என, நிர்வாக சிக்கல் நீடித்தது.
இதனால், ஓராண்டில் முடிக்க வேண்டிய மூடு கால்வாய் பணியை, மூன்று ஆண்டுகளாக நீடிப்பதுடன், 15 சதவீத பணி மீதம் உள்ளது.
இந்நிலையில், வரும் பருவமழைக்கு முன் பணியை முடிக்க, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, கழிவுநீர் குழாயை மாற்றி அமைக்காமல், மூடு கால்வாய் கட்டும் பணி துவங்கியது.
குழாயை மாற்றாமல் பணி செய்தால், மழையின்போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என, சோழிங்கநல்லுார் பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, கால்வாய் அருகில், 300 மீட்டர் நீளத்திற்கு புதிய கழிவுநீர் குழாய் அமைக்கவும், கால்வாய்க்குள் இருக்கும் குழாயை வெளியே எடுக்க செலவாகும் தொகையை தருவதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது.
அதேபோல், குழாய் மாற்றும் பணியை குடிநீர் வாரியம் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி, ஜூலை மாதத்தில் செய்து முடிக்கப்படும். பணி முடிந்ததும் பருவமழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்படாது என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
