/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மவுன்ட் - பூந்தமல்லி சாலை படுமோசம் மாறி மாறி கைகாட்டும் அரசு துறைகள்
/
மவுன்ட் - பூந்தமல்லி சாலை படுமோசம் மாறி மாறி கைகாட்டும் அரசு துறைகள்
மவுன்ட் - பூந்தமல்லி சாலை படுமோசம் மாறி மாறி கைகாட்டும் அரசு துறைகள்
மவுன்ட் - பூந்தமல்லி சாலை படுமோசம் மாறி மாறி கைகாட்டும் அரசு துறைகள்
ADDED : செப் 09, 2024 02:50 AM

அய்யப்பன்தாங்கல்:படுமோசமாக உள்ள அய்யப்பன்தாங்கல் மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை, மெட்ரோ நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் மாறி மாறி கைகாட்டுவதாக, பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பூந்தமல்லி மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலையில், தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை பல இடங்களில் பெயர்ந்து, ஜல்லி கற்கள் சாலையில் சிதறிய நிலையில் உள்ளன.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. அதேபோல், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி வருகிறது.
சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பை, சாலையில் தேங்கும் தண்ணீரில் கலந்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே, சாலையை முறையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த என்.ராஜன், 60, என்பவர் கூறியதாவது:
சாலையோரம் மழைநீர் தேங்குகிறது. பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து கேட்டால் சாலை எங்களது அல்ல, நெடுஞ்சாலைத் துறையிடம் உள்ளது என, ஊராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. நெடுஞ்சாலை துறையிடம் கேட்டால், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் சாலையை ஒப்படைத்துள்ளோம் என்கின்றனர்.
யார் தான் இந்த சாலையை சீர் செய்வார்கள் எனத் தெரியவில்லை. அவதிப்பட வேண்டும் என்பது மக்கள் விதி
இவ்வாறு அவர் கூறினார்.