/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி மேயரை எதிர்த்து ராஜினாமா முடிவு அதிருப்தி கவுன்சிலர்களுடன் நேரு சமரசம்
/
காஞ்சி மேயரை எதிர்த்து ராஜினாமா முடிவு அதிருப்தி கவுன்சிலர்களுடன் நேரு சமரசம்
காஞ்சி மேயரை எதிர்த்து ராஜினாமா முடிவு அதிருப்தி கவுன்சிலர்களுடன் நேரு சமரசம்
காஞ்சி மேயரை எதிர்த்து ராஜினாமா முடிவு அதிருப்தி கவுன்சிலர்களுடன் நேரு சமரசம்
ADDED : ஜூன் 19, 2024 12:32 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக ராஜினாமா முடிவுடன் போர்க்கொடி துாக்கியுள்ள தி.மு.க., கவுன்சிலர்களுடன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு சமாதான பேச்சு நடத்தியுள்ளார். இன்றும் மாவட்ட செயலர் சுந்தர் தலைமையில், காஞ்சிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரண்டாம் கட்டமாக சமாதான பேச்சு நடக்க உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமி உள்ளார். அவரது கணவர் யுவராஜ், மாநகராட்சி நிர்வாகத்தில் ஆதிக்கமும் செலுத்தி வந்ததால், தி.மு.க., கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்தனர். அவர்களுடன் சேர்ந்து, அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களும், மேயருக்கும் அவரது கணவருக்கும் எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மாநகராட்சி கூட்டத்தையும் புறக்கணித்து வந்தனர். இதனால், தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல், கடும் நெருக்கடி ஏற்பட்டது.
அடுத்தகட்டமாக மேயர் மகாலட்சுமி மீது, நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர, 17 தி.மு.க., கவுன்சிலர்கள், ஏழு அ.தி.மு.க., கவுன்சிலர்கள்.
இரண்டு பா.ம.க., கவுன்சிலர்கள், காங்., துணை மேயர் குமரகுருநாதன், ஐந்து சுயேச்சைகள், பா.ஜ., கவுன்சிலர் ஒருவர் என, 33 பேர் இணைந்து, கலெக்டர் கலைச்செல்வியிடம் கடந்த 7ம் தேதி இரவு மனு அளித்தனர்.
தி.மு.க., கவுன்சிலர்கள், காங்., துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோரை சமாதானப்படுத்த, அவர்களை சென்னைக்கு அழைத்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேச்சு நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோரும் உடனிருந்தனர்.
மாவட்ட செயலர் சுந்தர் தலைமையில், காஞ்சிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரண்டாம் கட்ட பேச்சு இன்று நடைபெறுகிறது.
சென்னையில் அமைச்சர் நேருவுடன் நடந்த பேச்சின்போது, பேசப்பட்டவை குறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தரப்பில் கூறியதாவது:
தி.மு.க., கவுன்சிலர்கள் 32 பேர், காங்., துணை மேயர் குமரகுருநாதனை அழைத்து அமைச்சர் நேரு பேச்சு நடத்தினார்.
இதில், மேயர் மற்றும் மேயர் கணவரின் ஆதிக்கம் குறித்தும் தெரிவித்தோம். கவுன்சிலர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, மேயர் மற்றும் மேயரின் கணவரும் மறுப்பு தெரிவித்தனர். மாநகராட்சியில் எந்த விதிமீறலும், முறைகேடும் நடக்கவில்லை என, மேயர் தரப்பினர் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர். பிரச்னையின்றி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு தி.மு.க., கவுன்சிலர்கள் கூறினர்.