/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாயில் பிளாஸ்டிக் அடைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு 'நோட்டீஸ்'
/
பகிங்ஹாம் கால்வாயில் பிளாஸ்டிக் அடைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு 'நோட்டீஸ்'
பகிங்ஹாம் கால்வாயில் பிளாஸ்டிக் அடைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு 'நோட்டீஸ்'
பகிங்ஹாம் கால்வாயில் பிளாஸ்டிக் அடைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு 'நோட்டீஸ்'
ADDED : மே 03, 2024 12:24 AM
சென்னை, பிளாஸ்டிக் கழிவுகள், மழைநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பகிங்ஹாம் கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது.
சேப்பாக்கம், எம்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையம் அருகே 100 மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக், தெர்மாகோல், ரப்பர் உள்ளிட்ட கழிவுகள் கால்வாயை அடைத்து உள்ளன.
கால்வாயின் அசல் ஆழம், கடல் மட்டத்திலிருந்து 6 அடிக்கு கீழே இருக்க வேண்டும், ஆனால் வண்டல் மற்றும் கழிவுநீர் தேங்கியதால், இப்போது கடல் மட்டத்திலிருந்து, 3 அடி உயரத்தில் உள்ளது.
கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், அதனால் அப்பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், கடந்த பிப்ரவரியில், நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சென்னையில் பகிங்ஹாம் கால்வாய், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் அடைபட்டுள்ளது. இதனால், கடல் மட்டத்திலிருந்து கால்வாய், 3 அடி உயரத்தில் உள்ளது.
இதன் காரணமாக, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுகள் தேங்கி பெரும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது தெரிய வருகிறது.
இது சுற்றுச்சூழல் பிரச்னை என்பதால், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் உள்ளது.
பகிங்ஹாம் கால்வாயை சுத்தப்படுத்தும் பணி நடப்பதாகவும், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ளது.
பகிங்ஹாம் கால்வாய் கழிவுகளால் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், மத்திய சுற்றுச்சூழல் துறையின் சென்னை மண்டல அலுவலகம், சென்னை கலெக்டர் ஆகிய சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் பதிலளிக்க வேண்டும்.
இந்த விவகாரம், தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தொடர்பானது என்பதால், அங்கு இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 4ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.