/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய இலவச பட்டா இடங்கள்
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய இலவச பட்டா இடங்கள்
ADDED : மே 27, 2024 01:35 AM

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம், ஆப்பூர் கிராமத்தில், புல எண்: 308 மற்றும் 310 இடங்கள், ஆதிதிராவிடர் நத்தம் வகைப்பாட்டைச் சேர்ந்தவை.
இந்த இடத்தை, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டுமனைகளாக பிரித்து, ஆப்பூர் குறுவட்டத்தைச் சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க முடிவு செய்தனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம், மறைமலை நகரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், அன்பரசன் முன்னிலையில், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதம், உள்ளூரைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், உள்ளூரில் வீட்டுமனை இல்லாமல் உள்ளோருக்கு, பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி, இலவச பட்டா மனை வழங்கப்பட்ட இடங்களில், ஆக்கிரமித்து கொட்டகை அமைத்தனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, கொட்டகை மீது தி.மு.க., கட்சிக் கொடியை ஏற்றினர்.
இதுகுறித்து, ஆப்பூர் கிராம நிர்வாக அலுவலர், பாலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பேச்சுக்கு பின், கட்சி கொடி அகற்றப்பட்டது.
மேலும், 15 நாட்களில் கொட்டகைகளை அகற்ற வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டனர். இரண்டு மாதங்களை கடந்தும், இதுவரை கொட்டகைகள் ஒன்றுகூட அகற்றப்படவில்லை.
அதிகாரிகளால் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையும் மாயமாகி உள்ளது. உள்ளூர் அரசியல்வாதி சிலரின் ஆதரவு உள்ளதால், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தேர்தல் பணிகள் காரணமாக, ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளது. விரைவில், இந்த கொட்டகைகள் அகற்றப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனக் கூறினார்.
- நமது நிருபர் -

