sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நீலகிரியில் விளையும் சீன வகை காய்கறி சென்னையில் நேரடியாக விற்க உத்தரவு

/

நீலகிரியில் விளையும் சீன வகை காய்கறி சென்னையில் நேரடியாக விற்க உத்தரவு

நீலகிரியில் விளையும் சீன வகை காய்கறி சென்னையில் நேரடியாக விற்க உத்தரவு

நீலகிரியில் விளையும் சீன வகை காய்கறி சென்னையில் நேரடியாக விற்க உத்தரவு


ADDED : ஜூலை 03, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நீலகிரி மாவட்டத்தில் விளையும் சீன வகை காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, சென்னையில் குறைந்த விலைக்கு விற்க அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை உட்பட நான்கு கூட்டுறவு சங்கங்கள், 'பண்ணை பசுமை' என்ற பெயரில் காய்கறி கடைகளை நடத்துகின்றன.

அவற்றில், மொத்த விலை சந்தைகளில் இருந்து வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வாங்கப்பட்டு, சற்று குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குந்தா, ஊட்டி, குன்னுார் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள், புரோகோலி, 'சுக்குனி, ஐஸ்பெர்க், லெட்யூஸ், பிரஸ்ஸல்ஸ், செலரி, பார்செலி' உள்ளிட்ட சீன வகை காய்கறிகள் மற்றும் முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயிரிடுகின்றனர்.

அவற்றை, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்படும், மலைக்காய்கறிகள் மையத்திற்கு எடுத்து வந்து, ஏலத்தில் விற்கின்றனர். இந்த மையம் நகராட்சி சந்தையில் செயல்படுகிறது. ஏலத் தொகையில் 7 சதவீத கமிஷன், மலைக் காய்கறிகள் ஏல மையத்திற்கு செலுத்தப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகரில் சீன வகை காய்கறிகளுக்கு, அதிக தேவை காணப்படுகிறது.

எனவே, நீலகிரி மாவட்ட விவசாயிகளிடம் இருந்து சீன வகை காய்கறிகள், கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை கொள்முதல் செய்து, சென்னைக்கு எடுத்து வந்து குறைந்த விலைக்கு விற்குமாறு நீலகிரி கூட்டுறவு சங்கத்திற்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி கூறியதாவது:

சீன வகை காய்கறிகள், நீலகிரியில் தான் பயிரிடப்படுகின்றன. இந்த காய்கறிகள் துரித உணவு, சூப் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நீலகிரி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு காய்கறி வாங்கும் வியாபாரிகள், சந்தையில் அதிக விலைக்கு விற்கின்றனர்.

எனவே, நீலகிரி மலை காய்கறி ஏல மையத்தில் வணிகம் செய்யும் விவசாயிகளிடம் இருந்து, சீன வகை உள்ளிட்ட காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து, தினமும் 2 - 4 டன் என, லாரி கொள்ளளவுக்கு குளிர்ப்பதன வசதியுடன் சென்னைக்கு அனுப்பி, பண்ணை பசுமை கடைகள் வாயிலாக விற்கப்பட உள்ளது.

இதனால், விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைப்பதுடன், மக்களுக்கும் குறைந்த விலைக்கு காய்கறிகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடில் வரத்து அதிகரிப்பு: காய்கறி விலை சரிவு

சென்னை கோயம்பேடு சந்தைக்கு, பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து பலவகை காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன. மஹாராஷ்டிராவில் இருந்து பெரிய வெங்காயம், உ.பி., மற்றும் ஹரியானாவில் இருந்து உருளைக்கிழங்கு விற்பனைக்கு வருகிறது.

அதிக விளைச்சல் உள்ள காலங்களில், 500 லாரிகளுக்கு மேல் வரத்து இருக்கும். கடந்த மூன்று மாதங்களாக, விளைச்சல் குறைந்ததால், 300 லாரிகளுக்கும் குறைவாக காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. இதனால், பலவகை காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்தது.

ஒரு கிலோ பீன்ஸ் 180 ரூபாய்க்கும், கேரட், பீட்ரூட், கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சைமிளகாய், குடைமிளகாய், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்டவை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் காய்கறிகள் விளைச்சல் துவங்கியுள்ளது. இதையடுத்து, காய்கறிகளின் வரத்து மெல்ல அதிகரித்து வருகிறது. பலவகை காய்கறிகளும் கிலோ 50 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், தக்காளி 40 --- 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆடி மாதம் துவங்கினால், அறுவடை களைக்கட்டி, காய்கறிகளின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us