/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ்காரருக்கு 'பளார்' பா.ம.க., பிரமுகர் கைது
/
போலீஸ்காரருக்கு 'பளார்' பா.ம.க., பிரமுகர் கைது
ADDED : ஜூலை 24, 2024 12:38 AM

மணலி,
மணலிபுதுநகர், ஈச்சங்குழி பகுதியில் அதிவேகமாக வந்த டாரஸ் லாரியை மறித்து, போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டுனர் சங்கரிடம் எந்த ஆவணங்களும் இல்லாததால், லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பா.ம.க., பிரமுகரும் முன்னாள் கவுன்சிலருமான குபேந்திரன், 52, போலீசாரிடம் 'லாரியின் ஆவணங்கள் வீட்டில் உள்ளது' எனக் கூறினார்.
போலீசார் லாரிக்கு அபராதம் விதித்தனர். குபேந்திரன் ஆன்லைன் வாயிலாக அபராதம் தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்த போக்குவரத்து ஏட்டு சரவணனை, குபேந்திரன் ஆபாசமாக பேசியதோடு, 'நான் ஒரு கவுன்சிலர், அடிக்கடி என் லாரியை பிடித்து அபராதம் போடுகிறீர்கள்; உங்களை சும்மா விடமாட்டேன். இரண்டு நாளில் உங்களை பணியிடம் மாற்றம் செய்வேன்' என மிரட்டியதோடு, அவரது கன்னத்தில் அறைந்தார்.
இது குறித்து மணலிபுதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரை, 'அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கையால் தாக்கி காயம் ஏற்படுத்துதல்' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.