ADDED : ஜூலை 31, 2026 07:41 PM
திருவேற்காடு: ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு நகராட்சி, 11வது வார்டு வெங்கடேஸ்வரா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.
எட்டு மாதங்களாக நடக்கும் இப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலையால், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் சேதமடைந்துள்ளன. தவிர, பணிகளும் முறையாக நடக்கவில்லை.
லாரிகள், நகருக்குள் வர முடியாத அளவிற்கு சாலையில் கழிவுநீர் தேங்கி, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தியடைந்த பகுதிமக்கள், அபிராமி நகர் பிரதான சாலையில், நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை, மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரசப் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, கழிவுநீர் அகற்றப்பட்டு, சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
