/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் செம்பாக்கத்தில் வெகுண்டெழுந்த மக்கள்
/
கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் செம்பாக்கத்தில் வெகுண்டெழுந்த மக்கள்
கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் செம்பாக்கத்தில் வெகுண்டெழுந்த மக்கள்
கழிவுநீர் கால்வாயில் குடிநீர் குழாய் செம்பாக்கத்தில் வெகுண்டெழுந்த மக்கள்
ADDED : ஜூன் 07, 2024 12:23 AM

தாம்பரம் மாநகராட்சியில், மாடம்பாக்கம், செம்பாக்கம், சிட்லப்பாக்கம் உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதற்கு முன், சிட்லப்பாக்கம் பகுதியில், குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடியது.
இதனால், மாடம்பாக்கம் பேரூராட்சி பகுதியில் கிணறு அமைத்து, அதிலிருந்து, செம்பாக்கம் நகராட்சி பாரதிதாசன் தெரு வழியாக, இரும்பு குழாய் பதித்து, சிட்லப்பாக்கத்திற்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.
இந்த நிலையில், பாரதிதாசன் தெரு வழியாக செல்லும் குழாயில் இருந்து, ஐந்தாவது மண்டலம், வளையாபதி தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வகையில், 1 கி.மீ., துாரத்திற்கு, 8 அங்குல அகலம் உடைய பிளாஸ்டிக் குழாய் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
புதிதாக அமைக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் குழாய், பாரதிதாசன் தெருவின் மற்றொரு புறத்தில் செல்லும் கழிவுநீர் கால்வாய் வழியாக எடுத்து செல்லப்படுகிறது. இதனால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து பிரச்னை ஏற்படும் என கருதிய அப்பகுதியினர், பணியை தடுத்து நிறுத்தினர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பிரதான குழாயில் இருந்து, குடிநீர் எடுத்துச் செல்லப்படும் பிளாஸ்டிக் குடிநீர் குழாய், கழிவுநீர் கால்வாய் வழியாக எடுத்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த கழிவுநீர் கால்வாய், சமீபத்தில் மாருதி நகர் பிரதான சாலையில் கட்டப்பட்ட மூடுகால்வாயுடன் இணைகிறது. புதிதாக பதிக்கப்படும் பிளாஸ்டிக் குழாயில் ஓட்டை விழுந்தாலோ, அழுத்தம் தாங்க முடியால் உடைந்தாலோ, ஒட்டு மொத்த கழிவுநீரும், இணைப்பு குழாய் வழியாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும்.
அந்த தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்றுகள் ஏற்படும். அதனால், இணைப்பு குழாயை வேறு வழியாக பதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கழிவுநீர் கால்வாய் செல்லும் இடத்தில், தற்போது, 2.5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இன்னும், 1.5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, குழாய் பதிக்கப்படும். பிளாஸ்டிக் குழாய் மீது டி.ஏ., எனப்படும், இரும்பு குழாய் பதிக்கப்படும்' என்றனர்.
- - நமது நிருபர்கள் --