/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுச்சாவடிகளில் மோதல் வெடிக்க வாய்ப்பு; சுயேச்சைகள் பின்புலத்தை ஆராயும் போலீசார்
/
ஓட்டுச்சாவடிகளில் மோதல் வெடிக்க வாய்ப்பு; சுயேச்சைகள் பின்புலத்தை ஆராயும் போலீசார்
ஓட்டுச்சாவடிகளில் மோதல் வெடிக்க வாய்ப்பு; சுயேச்சைகள் பின்புலத்தை ஆராயும் போலீசார்
ஓட்டுச்சாவடிகளில் மோதல் வெடிக்க வாய்ப்பு; சுயேச்சைகள் பின்புலத்தை ஆராயும் போலீசார்
UPDATED : ஏப் 04, 2024 07:27 AM
ADDED : ஏப் 04, 2024 12:18 AM

கட்சி சார்பு சுயேச்சைகளால், ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடிகளில் பிரச்னை ஏற்படலாம் என்பதால், தற்போதே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையின் மூன்று தொகுதிகளில் நிற்கும் சுயேச்சைகளின் பின்புலம் குறித்து, போலீசாரால் ஆராயப்படுகிறது.
வட, மத்திய மற்றும் தென் சென்னை ஆகிய லோக்சபா தொகுதிகளில், மொத்தம் 107 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்கள், பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., நா.த.க., மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் என அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில, பதிவு செய்யப்பட்ட கட்சியினர் மற்றும் சுயேச்சைகள்.
இந்த சுயேச்சைகளில் பெரும்பாலானோர் கட்சி சார்புடையவர்கள். அதாவது, தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நாம் தமிழர் கட்சிகளால், அந்தந்த தொகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பொதுவாக, எதிர்தரப்பில் நிறுத்தும் வேட்பாளர்களின் ஓட்டுகளை சிதற வைக்கவும், வாக்காளர்களை குழப்பும் நோக்கத்திலும், அதே பெயர் உடைய சுயேச்சைகளை நிறுத்துவது கட்சிகளின் வழக்கம். ஆனால், தென் சென்னையில் அதுபோன்ற சுயேச்சைகள் நிறுத்தப்படவில்லை.
மாறாக, மூன்று பிரதான கட்சிகளும், ஆறு சட்டசபை தொகுதிகளை கணக்கிட்டு, தலா ஆறு சுயேச்சைகள் என 18 பேரை நிறுத்தியுள்ளதாக, கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்கள்.
இவர்களுக்கு, பிரதான கட்சி வேட்பாளர்களை போல் வாகனம், பிரசாரம், நுழைவு சீட்டு அனுமதி மற்றும் ஓட்டுச்சாவடியில் முகவர்களை அமர வைப்பது போன்ற சலுகைகள் கிடைக்கும்.
மேலும், ஓட்டுப்பதிவின் போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும், முக்கிய கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் தவிர, கட்சி சார்பு சுயேச்சைகளின் முகவர்கள் என, ஒரு ஓட்டுச்சாவடியில், 20 முதல் 25 பேர் வரை முகவர்கள் இருப்பர்.
சுயேச்சைகள் என்றாலும், ஓட்டுச்சாவடிக்குள் மறைமுகமாக அவர்கள் சார்ந்த பிரதான கட்சிகளுக்காக செயல்படுவர். இதுபோக, பிரதான கட்சி வேட்பாளரின் செலவை சரிகட்டவும், இவர்கள் மறைமுகமாக செயல்படுவர். கட்சி சார்பு இல்லாத சுயேச்சைகளுக்கு, முகவர்கள் இருக்க வாய்ப்பில்லை.
கட்சி சார்பு சுயேச்சைகளுக்குள் மோதல், கள்ள ஓட்டு போட முயல்வதால் ஏற்படும் பிரச்னை, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து சரி கட்ட முயல்வதில் ஏற்படும் போட்டி உள்ளிட்ட காரணங்களால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக, போலீசார் கவலைப்படுகின்றனர்.
இதேபோன்ற பிரச்னைகள், மற்ற தொகுதிகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.
போலீசார் கூறியதாவது:
தென் சென்னையில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய கட்சி வேட்பாளர்கள், பிரபலமானவர்கள் என்பதால், வி.ஐ.பி., தொகுதியாக பார்க்கப்படுகிறது.
இதனால், சட்டம் - ஒழுங்கு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். கட்சி சார்பு சுயேச்சைகளுக்குள் மோதல் நடந்தால், பெரிய பிரச்னை ஏற்படும்.
ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் தவறுகளை, கட்சி சார்பு இல்லாத சுயேச்சைகள் சுட்டிக்காட்டும்போது, கட்சி சார்பு சுயேச்சைகளால் அவர்கள் மிரட்டலுக்கு ஆளாவர். புகார் தெரிவித்தால், அங்கு மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால், கட்சி சார்பு சுயேச்சைகள், அவர்களின் ஆதரவாளர்கள், நண்பர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
குறிப்பாக, பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் அமரும் கட்சி சார்பு சுயேச்சைகளின் முகவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படும். ஓட்டுப்பதிவு சுமூகமாக நடக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர் --

