/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்
/
ரயிலில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்
ADDED : மார் 09, 2025 01:15 AM
பெரம்பூர்,
ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 60 அடி சாலையில் அமைந்துள்ள, எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளையடித்த வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்தாண்டு ஜூன் 9ம் தேதி, ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியான சில நாட்களில், கெல்லீஸ் பகுதியில் மீண்டும் ஏ.டி.எம்., திருட்டில் ஈடுபட்டு, அதே பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆவடி ஏ.டி.எம்., கொள்ளை வழக்கில் ஆஜர்படுத்த, ஆவடி குற்றப்பிரிவு போலீசார், சிறுவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து மின்சார ரயில் வாயிலாக, திருவள்ளுர் நீதிமன்றத்துக்கு, நேற்று முன்தினம் காலை அழைத்து சென்றனர்.
வழக்கு விசாரணைக்கு பின், மீண்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க, அரக்கோணத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் வரும், மின்சார ரயிலில் அழைத்து வந்தனர்.
ரயில், பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் நின்று கிளம்பிய போது, திடீரென, போலீசாரின் கையை உதறிவிட்டு, சிறுவன் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பினான்.
இது குறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசில், ஆவடி குற்றப்பிரிவு போலீசார் புகார் அளித்தனர். அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை தேடுகின்றனர்.