/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிப்பு
/
வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிப்பு
வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிப்பு
வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை நேதாஜி நகர் பகுதியில், ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் ராஜ்குமார், 33. இவருடன் தாய் கல்யாணி, 53, வசித்து வருகிறார்.
இவரது வீடு இருக்கும் இடம், வண்டிப் பாதை வகையைச் சேர்ந்தது என, வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வீட்டிற்கு பின்னால், 15 வீட்டு மனைகள் உள்ளன. அதில், சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
அவர்கள் சென்று வர முறையான வழி ஏதும் இல்லாததால், ஒவ்வொரு மழைக்காலங்களிலும் வெளியேற முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், உரிய பாதை ஏற்படுத்தி தரும்படியும் வருவாய்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், வண்டிபாதை நிலத்தில் உள்ள ராஜ்குமார் வீட்டை அகற்றி, பாதை ஏற்படுத்த வருவாய் துறையினர் முடிவு செய்தனர். அதற்கான, 'நோட்டீஸ்' வழங்கப்பட்ட நிலையில், நேற்று வீட்டை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி, தாசில்தார் பிரீத்தி தலைமையிலான வருவாய் துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று ராஜ்குமார் வீட்டை இடித்து அகற்ற ஜே.சி.பி.,யுடன் சென்றனர். அப்போது, வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த ராஜ்குமார், கால அவகாசம் கேட்டார்.
வருவாய் துறையினர் மறுத்த நிலையில், வீட்டிற்குள் சென்ற ராஜ்குமார், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீயிட்டு கொண்டார். உடலில் பற்றி எரிந்த தீயுடன் அலறியடித்தபடி வீட்டில் இருந்து வெளியேறிய ராஜ்குமாரை கண்டு, கூடியிருந்த அலுவலர்களும் பதறியடித்து ஓடினர்.
தீயணைப்பு துறையினர், விரைந்து செயல்பட்டு, ராஜ்குமார் மீது பற்றிய தீயை அணைத்தனர்.
அவரை மீட்டு கும்மிடிப் பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல்சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் இடிக்க முற்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வீட்டு உரிமையாளர் ராஜ்குமார் தீக்குளித்து, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள செல்வாக்குமிக்க நபர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தி.மு.க., ஆட்சியில் சட்ட விரோதமாக செயல்படக்கூடிய பணக்காரர்கள் மட்டும்தான் வாழ முடியும்; நேர்மையான ஏழைகள் வாழ முடியாது. கும்மிடிப்பூண்டி நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,
கும்மிடிப்பூண்டியில் தான் வசிக்கும் வீட்டை இடிக்க விடாமல் தடுக்க முற்பட்ட வாலிபர் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதே வேளையில், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சரும், மதுவிலக்கு அமைச்சருமான முத்துசாமி, தீபாவளிக்கு முன் டாஸ்மாக்கில், 90 மில்லி மது பாட்டிலை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக இருக்கிறார். இது, தமிழகத்தில், தி.மு.க., அரசு எதற்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. திருவள்ளூரில், 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளியிருக்கிறது அரசு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.
- அண்ணாமலை,
தலைவர், தமிழக பா.ஜ.,