/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காட்டாங்குளத்துார் காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை
/
காட்டாங்குளத்துார் காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை
காட்டாங்குளத்துார் காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை
காட்டாங்குளத்துார் காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை
ADDED : மே 07, 2024 12:12 AM

காட்டாங்குளத்துார் சென்னையில் இருந்து செங்கல்பட்டு போகும் வழியில் காட்டாங்குளத்துார் உள்ளது. இங்கு பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்தக் கோவில், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இங்கு குடிகொண்டிருக்கும் இறைவன், கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்புரிகிறார். தனி சன்னதியில், தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீ ஞானாம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். மேலும் இங்கு விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பைரவர் ஆகியோரும் வீற்றிருந்து இக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.
பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவங்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.
இந்த கோவிலில் ராகு,கேதுவுக்கு தனியாக சன்னதி உள்ளது. இதன் காரணமாக இந்த கோவில் ராகு - கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.
ஆந்திரா மாநிலம் காளஹஸ்தியில் சர்ப்ப தோஷ பரிகார பூஜைகள் நடப்பதை போல, இங்கும் நடைபெறுவதால், இந்தத் தலம் 'தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கப்படுகிறது. ஞாயிற்று கிழமைகளில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, பூஜை நடைபெறும். 96008 63620 என்ற எண்ணில் அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த ராகு,கேது சர்ப்ப தோஷ பரிகார பூஜையில் பங்கேற்போருக்கு கட்டணம் 600 ரூபாய். பூஜைப்பொருள் அனைத்தும் கோவில் சார்பில் வழங்கப்படுகிறது. பால் மற்றும் பூக்கள் மட்டும் பக்தர்கள் கொண்டு வரவேண்டும். பக்தர்களே ராகு,கேதுவிற்கு பாலாபிஷகேம் செய்வது பூஜையின் சிறப்பம்சம்.
காட்டாங்குளத்துார் காளத்தீஸ்வரர் கோவில், 17 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் காணவிருப்பதால், ராகு, கேது சன்னிதி தவிர மற்ற சன்னிதிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன.
கோவில் மூர்த்திகள் அனைவரும் பாலாலயம் செய்யப்பட்டு ஒரு அறையில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகின்றனர். ராகு, கேது, சர்ப்பதோஷ பரிகார பூஜைக்காக வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக, இந்த பூஜை மட்டும் தொடர்ந்து நடக்கிறது.