/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் - நெரிசல் - சகதி - சிரமம்; ரிப்பீட்டு...
/
மழைநீர் - நெரிசல் - சகதி - சிரமம்; ரிப்பீட்டு...
ADDED : ஆக 06, 2024 12:51 AM

சென்னை, புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், பல இடங்களில் வாகனங்களில் செல்ல சிரமம் ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அண்ணா நகர் மண்டலம், 106வது வார்டுக்கு உட்பட சூளைமேட்டில், நேரு தெரு, கண்ணகி தெரு, பாரி தெரு, பாரதியார் தெருக்கள் தாழ்வாக இருப்பதால், குளம்போல் தண்ணீர் தேங்கியது.
வளசரவாக்கம் -- ஆற்காடு சாலை மற்றும் போரூர் - -- மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர் மேம்பாலத்தின் கீழ், குளம் போல் மழைநீர் தேங்கியது.
இதனால், போரூரில் இருந்து கிண்டி செல்லும் மவுன்ட் - - பூந்தமல்லி நெடுஞ்சாலை; போரூர் -- குன்றத்துார் சாலை; போரூர் - - வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், நேற்று காலை கடும் நெரிசல் ஏற்பட்டது.
போரூர் மேம்பாலத்தில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
மந்தைவெளி பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அவற்றை அப்புறப்படுத்த வேண்டிய அதிகாரிகளோ கண்டும் காணாமல் விட்டுவிட்டதால், பயணியர் முழங்கால் தண்ணீரில், மிகுந்த சிரமத்துடன் சென்று பேருந்தில் ஏறினர்.
இதே பிரச்னை அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலைய பயணியருக்கும் ஏற்பட்டது. திருவேற்காடு நகராட்சி, நுாம்பல் பிரதான சாலை 1.5 கி.மீ., துாரம் உள்ளது.
ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் இச்சாலையில், மழைநீர் தேங்கி வெள்ளக்காடானதால், மேலும் சேதமடைந்தது. பள்ளங்களில் தடுமாறி விழுந்துவிடுவோமோ என, கனரகம் உட்பட அனைத்து வகை வாகன ஓட்டிகளும் பீதியில் சென்றனர்.
மெட்ரோ பணி, பல்துறை சேவை பணி, வடிகால் பிரச்னை, இணைப்பு கால்வாய் பணி முடியாமை உள்ளிட்ட காரணங்களால், பிரதான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி உயரம் நீர்மட்டமும் உடையது.
நேற்று முன்தினம் இரவு ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் ஏரிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. இதனால், ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 577 கன அடியும், கொள்ளளவு 1.441 டி.எம்.சி.,யும், நீர் மட்ட உயரம் 14.50 அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம்
நீர்மட்டம் உயர்வு
- நமது நிருபர் -