/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடக்கவே லாயக்கற்ற ராமலிங்கா நகர் சாலை
/
நடக்கவே லாயக்கற்ற ராமலிங்கா நகர் சாலை
ADDED : ஜூலை 19, 2024 12:24 AM

புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில், முக்கிய வழித்தடமாக ராமலிங்கா நகர் பிரதான சாலை உள்ளது. 50க்கும் மேற்பட்ட தெருக்களின் நுழைவாயிலாகவும் உள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக இந்த சாலையில், ஏதாவது ஒரு சேவை துறை பணி தொடர்ந்து நடப்பதால், சாலை மோசமாகி வாகன ஓட்டிகள் பெரும் இன்னலை சந்திக்கின்றனர். ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை.
சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:
இப்பகுதியில், 12 ஆண்டுகளுக்கு முன் சென்னை குடிநீர் வாரியத்தால் அமைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் தற்போது பலவீனமடைந்து, ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, அதன் வழியாக நீர் வெளியேறுகிறது.
இதை சரிசெய்ய குடிநீர் வாரியம் சார்பில் பணிகள் அடிக்கடி நடப்பதால், சாலை சேதமாக்கப்படுகிறது.
பணிகள் முடிந்த இடத்தில் சாலை சீரமைக்கப்பட்டாலும், குடிநீர் அல்லது பாதாள சாக்கடை குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, பள்ளம் தோண்டப்படுவதால், ராமலிங்கா நகர் பிரதான சாலை மேலும் மோசமடைகிறது.
தற்போதைய மற்றும் எதிர்கால மக்கள் தொகைக்கு ஏற்ப, பழைய பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்களை அகற்றி, குடிநீர் வாரியம் சார்பில் புதிதாக அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.