/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நுாலகம் பராமரிப்பு படுமோசம் குறைபாட்டால் வாசகர்கள் ஏமாற்றம்
/
அண்ணா நுாலகம் பராமரிப்பு படுமோசம் குறைபாட்டால் வாசகர்கள் ஏமாற்றம்
அண்ணா நுாலகம் பராமரிப்பு படுமோசம் குறைபாட்டால் வாசகர்கள் ஏமாற்றம்
அண்ணா நுாலகம் பராமரிப்பு படுமோசம் குறைபாட்டால் வாசகர்கள் ஏமாற்றம்
ADDED : ஆக 07, 2024 12:51 AM

சென்னை, ஆசியாவில் பெரிய நுாலகமாக, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், 172 கோடி ரூபாயில், 2008ம் ஆண்டு பணி துவங்கியது.
மொத்தம் 8 ஏக்கர் பரப்பளவில், 3.75 லட்சம் சதுர அடியில், எட்டு மாடி கொண்ட கட்டடம் கட்டி, 2010ம் ஆண்டு செப்., மாதம் திறக்கப்பட்டது.
இந்த நூலகம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற, அ.தி.மு.க., ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்.
அதன்பின், உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது. கதை, நாவல், கட்டுரை, வரலாறு, குழந்தைகள், பெண்கள் நலன், மருத்துவம் உள்ளிட்ட நுால்கள் லட்சக்கணக்கில் உள்ளன.
முழுதும் °ஏசி' வசதி கொண்ட நுாலகமானதால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பெண்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு படிப்போர் என, அனைத்து தரப்பினர் இங்கு வருகின்றனர்.
ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால், கூரை பெயர்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கழிப்பறை சுகாதார சீர்கேடாகவும், சேதமடைந்த கதவை கல் வைத்து முட்டு கொடுத்துள்ளனர்.
கட்டடத்தில் பயன்படுத்தி வீசி எறியும் குப்பை, ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர். கட்டடத்தின் வெளிப்புற பகுதியில் தேன்கூடு உள்ளதால், திடீரென கலைந்தால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இரண்டு நகரும் படிக்கட்டுகள் நீண்ட நாட்களாக செயல்படவில்லை. பெரும்பாலான சுவிட்ச் போர்டுகள் சேதமடைந்துள்ளன. இதனால், லிப்டில் சிக்கினால் காப்பாற்றும் வகையில் அமைக்க வேண்டிய அலாரம் செயல்படவில்லை.
எனவே, போதிய நிதி ஒதுக்கி நுாலகத்தை பராமரிக்க, நுாலகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.