/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிதான குடல் தின்னும் நோய் குழந்தைக்கு மறுவாழ்வு
/
அரிதான குடல் தின்னும் நோய் குழந்தைக்கு மறுவாழ்வு
ADDED : மே 11, 2024 12:06 AM
சென்னை, மிகவும் அரிதான குடல் தின்னும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சாலிகிராமம் சூர்யா மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் தீபா ஹரிஹரன், பச்சிளங்குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் ஆகியோர் கூறியதாவது:
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை 1.5 கிலோ மட்டுமே இருந்தது. குழந்தை பிறந்தது முதல் வயிற்றுப்பகுதி வீக்கமாகவும், உப்புசமாகவும் இருந்தது. மேலும், தாய்ப்பால் குடிக்காமல், மலத்தில் ரத்தம் கசிந்து, அக்குழந்தை மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது.
பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின், 'நெக்ரோடைசிங் என்டரோகொலிடிஸ்' என்ற அரிதான குடல் தின்னும் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. குழந்தையின் சிறுகுடல் பெருங்குடல் சிதைந்திருந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
பின், நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக, குடல்புண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குழந்தைக்கு பலமுறை தொடர்ந்து ரத்தம் ஏற்றப்பட்டது.
மேலும், தாய்ப்பால் ஊட்டுவது சவாலாக இருந்ததுடன், செரிமான பிரச்னையும் காணப்பட்டது. இதனால், நரம்பு வழியாக குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து செலுத்தப்பட்டது.
தொடர் சிகிச்சைக்குப் பின், குழந்தையின் குடல் வளர்ந்து, கொடுக்கப்படும் பாலின் அளவும் அதிகரித்தது. குழந்தையின் எடையும் அதிகரித்து, தற்போது பூரண குணமடைந்து, குழந்தை நலமுடன் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.