/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஸ் கிளப் 'சீல்' விவகாரத்தில் முறையீடு நிராகரிப்பு
/
ரேஸ் கிளப் 'சீல்' விவகாரத்தில் முறையீடு நிராகரிப்பு
ரேஸ் கிளப் 'சீல்' விவகாரத்தில் முறையீடு நிராகரிப்பு
ரேஸ் கிளப் 'சீல்' விவகாரத்தில் முறையீடு நிராகரிப்பு
ADDED : செப் 11, 2024 12:30 AM
சென்னை,'சென்னை, கிண்டியில் ரேஸ் கிளப் உள்ளது. 160.68 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டுகளுக்கு என ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. குத்தகை பாக்கி 730.86 கோடி ரூபாயை செலுத்தும்படி, ரேஸ் கிளப்பிற்கு, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், பாக்கியாக கோரப்பட்டுள்ள 730.86 கோடி ரூபாயை ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்தவும், இல்லையென்றால் அங்கிருந்து அகற்றவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ரேஸ் கிளப்பிற்கு வழங்கிய குத்தகையை ரத்து செய்து, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ராஜசேகர் அடங்கிய அமர்வில், ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் முறையிடப்பட்டது.
அரசு தரப்பில், இடத்தை காலி செய்வதற்கு அவகாசம் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, குத்தகை ரத்து குறித்த நோட்டீஸ் அளித்து, இடத்தை காலி செய்வதற்கான அவகாசம் அளித்த பின், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, 'கிளப் நுழைவாயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்படவில்லை' என, நிர்வாகம் தரப்பில், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில் நேற்று முறையிடப்பட்டது.
இதற்கு, கிளப்பிற்கு செல்லும் நுழைவுவாயில்களில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, உத்தரவாதத்தை அரசு மீறியிருந்தால், தனியாக வழக்கு தாக்கல் செய்யலாம் என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.