/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிப்படை வசதியற்ற பாரதியார் நகர் 30 ஆண்டாக தவிக்கும் பகுதிவாசிகள்
/
அடிப்படை வசதியற்ற பாரதியார் நகர் 30 ஆண்டாக தவிக்கும் பகுதிவாசிகள்
அடிப்படை வசதியற்ற பாரதியார் நகர் 30 ஆண்டாக தவிக்கும் பகுதிவாசிகள்
அடிப்படை வசதியற்ற பாரதியார் நகர் 30 ஆண்டாக தவிக்கும் பகுதிவாசிகள்
ADDED : ஜூலை 09, 2024 12:19 AM

திருநின்றவூர், ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி, 26வது வார்டு, சரஸ்வதி நகர் விரிவு பகுதியில், பாரதியார் தெருவில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளாக இங்கு தெருவிளக்கு, மழைநீர் வடிகால், சாக்கடை மற்றும் சாலை என, எந்த அடிப்படை வசதியும் நகராட்சியில் செய்து தரவில்லை.
இங்குள்ள 20 அடி மழைநீர் வடிகால், 10 அடியாக சுருங்கி உள்ளது. நகராட்சி அதிகாரிகள் அதை முழுமையாக துார் வார நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், மழைக்காலங்களில் திருநின்றவூர் பள்ளக் கழனி, வசந்தம் நகர், கன்னங்குளம், கணேசபுரம், ஸ்ரீவாரி கார்டன், சரஸ்வதி நகர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் வெள்ளம், மேற்கூறிய குடியிருப்பைச் சுற்றி தேங்கி நிற்கிறது.
பெரிய காலனியில், வெள்ளம் வடியும் பகுதியில் சிறிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் 10 நாட்கள் தேங்கி நிற்கும் வெள்ளம், பெரிய காலனி வழியாக பட்டாபிராம் தண்டரை ஏரியில் கலக்கிறது.
பல நாட்கள் வெள்ளம் தேங்கி நிற்பதால், மழையில் ஊர்ந்து வரும் பாம்புகள் குடியிருப்புகளில் தஞ்சம் புகுந்து, பகுதிவாசிகள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, மழை காலங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சாலை வசதி செய்து தராததால், மண் சாலை மழையால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், மருத்துவ அவசர தேவைக்கு, தனியார் வாகனங்கள் உள்ளே வர முடிவதில்லை. அந்த சூழலில், முதியவர்களை 150 மீட்டர் துாக்கிச் செல்லும் அவலம் உள்ளது.
சொந்த செலவில் சீரமைப்பு
இதனால் அதிருப்தியடைந்த பகுதிவாசிகள், ஒவ்வொரு மழைக்கு முன், சொந்த செலவில், கட்டட கழிவுகளை வாங்கி, சாலையில் கொட்டி சீரமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், தெரு விளக்குகளின் 'சுவிட்சு'களும் அபாய நிலையில் உள்ளதால், மழையில் மின்சாரம் தாக்கும் அச்சம் உள்ளது.
இது குறித்து, வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், சொத்து வரி மட்டும் தவறாமல், வீடு தேடி வந்து வசூலிப்பதாகவும், சொத்து வரி செலுத்தாதவர்களிடம் ஜப்தி நோட்டீஸ் வழங்கி, வரி வசூல் செய்வதாகவும் பகுதிவாசிகள் வேதனைப்படுகின்றனர்.
எனவே, மழைக்கு முன் அடிப்படை வசதிகளை செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,'சாலைக்கு தற்காலிக தீர்வு காண முடியாது. நகராட்சியில், சிறப்பு நிதி ஒதுக்கும் போது, பாரதியார் நகரில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.