/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எல்லை சாலைக்கு ரெட்டேரி மண் 'நோ' நீர்வளத்துறையினர் திடீர் கைவிரிப்பு
/
எல்லை சாலைக்கு ரெட்டேரி மண் 'நோ' நீர்வளத்துறையினர் திடீர் கைவிரிப்பு
எல்லை சாலைக்கு ரெட்டேரி மண் 'நோ' நீர்வளத்துறையினர் திடீர் கைவிரிப்பு
எல்லை சாலைக்கு ரெட்டேரி மண் 'நோ' நீர்வளத்துறையினர் திடீர் கைவிரிப்பு
ADDED : செப் 16, 2024 02:14 AM
சென்னை,:சென்னையில் நிலவும் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், துறைமுகங்களுக்கான சரக்கு போக்குவரத்திற்கு தீர்வு காணவும், மாமல்லபுரம் - காட்டுப்பள்ளி இடையே, சென்னை எல்லைச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
காட்டுபள்ளி - தச்சூர் இடையே முதற்கட்ட பணியும், தச்சூர் - திருவள்ளூர் புறவழிச்சாலை இடையே, இரண்டாம் கட்ட பணிகளும் வேகம் எடுத்துள்ளன. உயர்மட்ட சாலை அமைப்பதற்கு அதிகளவில் மண் தேவைப்படுகிறது.
இதற்காக திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம், செங்கரை ஏரிகளில் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு விதியை மீறி மண் எடுப்பதால், நிலத்தடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மாதவரம் அருகே உள்ள ரெட்டேரியை, சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, அங்கு 47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் மண் மற்றும் மணலை மறைமுகமாக, தனியார் கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த மண்ணை, சென்னை எல்லை சாலை பணிக்கு குறைந்த கட்டணத்தில் பெறுவதற்கு, தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் தயாராக உள்ளது. இதுகுறித்த செய்தி நமது நாளிதழில் சமீபத்தில் வெளியானது.
இதுதொடர்பாக, நீர்வளத்துறை பாலாறு வடிநில வட்ட அதிகாரிகளிடம் பேச்சும் நடந்துள்ளது. ஆனால், ஏரிக்கு மையத்தில் சுற்றுச்சூழல் தீவு பூங்கா அமைக்க மண் தேவைப்படுவதாக கூறி, முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது.
முதல்வர் என்ன செய்வார்
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரெட்டேரியில் எடுக்கப்படும் மண், சாலை அமைப்பதற்கு உரிய தரத்தில் உள்ளது. எனவே, நீர்வளத்துறையிடம் பேசினோம். துறையின் முக்கியபுள்ளி அனுமதி கிடைக்காததால், மண்ணை வழங்க முடியாது என கைவிரித்துவிட்டனர்.
ஏரிக்குள் மலைபோல மண்ணை குவித்து தீவு பூங்கா அமைக்கப்போகிறோம் என்கின்றனர். நாளடைவில் அவை கரைந்து, ஏரிக்குள் மீண்டும் சேர்ந்துவிடும் என்பதால், கொள்ளளவு பாதிக்கும் என எடுத்துக்கூறினோம்.
அதை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சாலை பணிக்கு மண்ணை வழங்கினால், இரண்டு பணிகளும் குறித்த காலத்திற்குள் முடியும்.
இவ்விஷயத்தில், தலைமைசெயலர், துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரின் செயலர் தலையிட்டால் தான் தீர்வு பிறக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.

