/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் உபரிநீர் கால்வாய் கரையில் இயங்கும் பிளாஸ்டிக் கிடங்குகளால் நீர் மாசு அபாயம்
/
புழல் உபரிநீர் கால்வாய் கரையில் இயங்கும் பிளாஸ்டிக் கிடங்குகளால் நீர் மாசு அபாயம்
புழல் உபரிநீர் கால்வாய் கரையில் இயங்கும் பிளாஸ்டிக் கிடங்குகளால் நீர் மாசு அபாயம்
புழல் உபரிநீர் கால்வாய் கரையில் இயங்கும் பிளாஸ்டிக் கிடங்குகளால் நீர் மாசு அபாயம்
ADDED : செப் 12, 2024 12:33 AM

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் புழல் ஏரி நிரம்பும் போது, அதில் இருந்து உபரிநீரை வெளியேற்றுவதற்கு, 11 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
புழல் ஏரி ஷட்டரில் துவங்கும் இந்த கால்வாய் சாமியார்மடம், தண்டல்கழனி, பாபா நகர், வடகரை, திருநீலகண்டன் நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயில், சடையங்குப்பம் வழியாக வங்க கடலில் கலக்கிறது.
இந்த கால்வாயில் பருவமழை காலங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முறையாக பணிகள் நடக்காததால் கரை உடைப்பு ஏற்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் தத்தளிப்பது வாடிக்கையாக உள்ளது.
நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள், சென்னை நிரந்தர வெள்ள தடுப்பு அறக்கட்டளை வாயிலாக நடந்து வருகின்றன.
மறுபுறம், 5 கோடி செலவில் நீர்வளத்துறை வாயிலாக, துார்வாரும் பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கின்றன.
இந்நிலையில், துார்வாரும் பணிகள் முடிந்த வடபெரும்பாக்கம் பகுதியில், பழைய பிளாஸ்டிக் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்டவை, உபரிநீர் கால்வாய் அருகே, மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
விரைவில் பருவமழை துவங்கும் நிலையில், இவை கால்வாய்க்குள் விழுந்து, அருகில் உள்ள தரைப்பாலத்தில் அடைத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இதேபோல, கரையோரங்களில் பல கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், நீரோட்டம் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாததால், நீர்வளத்துறையினர் விரக்தி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, பாலாறு வடிநில வட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
புழல் ஏரி உபரிநீர் கால்வாயை, முழுமையாக புனரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு, சென்னை மாநகராட்சி பெரும் இடையூறாக உள்ளது. மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாயில் வரும் கழிவுநீர், உபரிநீர் கால்வாயில் வெளியேறி வருகிறது.
இதை தடுக்க பலமுறை வலியுறுத்தியும், தொடர்புடைய மண்டல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
பிளாஸ்டிக், பாலித்தீன் பழைய குடோன்களை, ஆளும் கட்சியினர் தான் நடத்துகின்றனர். எனவே, அதன் மீது கை வைத்தால், நெருக்கடி வருகிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.