/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துப்பாக்கி முனையில் கொள்ளை: இருவர் கைது
/
துப்பாக்கி முனையில் கொள்ளை: இருவர் கைது
ADDED : ஏப் 30, 2024 12:39 AM

சென்னை ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33. வீட்டின் கீழ் தளத்தில் 'கிருஷ்ணா ஜூவல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக் கடை மற்றும் 'ரேகா' என்ற பெயரில் அடகு கடையும் நடத்தி வருகிறார்.
கடந்த 15ம் தேதி, மதியம் 12:00 மணி அளவில், 'மாருதி ஸ்விப்ட்' காரில் வாடிக்கையாளர்கள் போல நான்கு பேர் வந்தனர். திடீரென கடையின் ஷட்டரை அடைத்து, துப்பாக்கி முனையில் பிரகாஷை கட்டி போட்டனர். கடையில் இருந்த 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து காரில் தப்பினர். இவ்வழக்கில் தனிப்படை போலீசார், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் கொள்ளையரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கொள்ளை நடந்த கடை அருகே பதிவான மொபைல் போன் சிக்னல் அடிப்படையில், இருவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், ஹரிபுரா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், 26, மற்றும் ராஜஸ்தான் மாநிலம், துாங்கார்வா கிராமத்தைச் சேர்ந்த ஷீட்டான் ராம், 25, என தெரிந்தது.
கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கி, கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் இருந்த வீட்டில் தங்கியிருந்த கொள்ளையர்கள் தான், நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள் என தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த, ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். கொள்ளையில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக் மற்றும் சுரேஷ் ஆகியோரையுயும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

