/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.18 கோடி மோசடி நண்பருக்கு 'காப்பு'
/
ரூ.1.18 கோடி மோசடி நண்பருக்கு 'காப்பு'
ADDED : மே 06, 2024 01:36 AM

ஆவடி:ஆவடி, ஆனந்தா நகர், சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் காலித் முகமது, 43. இவர், கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
கடந்த 2022ல் இருந்து, பள்ளி நண்பரான ஆவடி பல்லவன் நகரைச் சேர்ந்த பாண்டியராஜ், 43, என்பவருடன் சேர்ந்து, பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.
ஆரம்பத்தில் லாப பணத்தை சரியாக கொடுத்த பாண்டியராஜ், அதன்பின், லாப பணம் 30 லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றினார். அவர் கொடுத்த காசோலையும், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.
அதேபோல், என் 'மாருதி ஐ20 ஸ்போர்ட்ஸ்' காரை, 17,000 ரூபாய் வாடகை தருவதாக ஆசை வார்த்தை கூறி எடுத்து சென்றார். அதன் பின், இரண்டு மாதம் 10,000 ரூபாய் கொடுத்து ஏமாற்றினார்.
இது குறித்து விசாரித்தபோது, என்னைபோல நான்கு பேரிடம் இரண்டு கார் மற்றும் 88 லட்சம் ரூபாய் என, மொத்தம் 1.18 கோடி ரூபாய் ஏமாற்றியது தெரிந்தது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் பரணி, ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் தலைமறைவாக இருந்த பாண்டியராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.