/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலாவதி 'சாக்லேட்' விற்பனை கடைக்காரருக்கு ரூ.20,000 அபராதம்
/
காலாவதி 'சாக்லேட்' விற்பனை கடைக்காரருக்கு ரூ.20,000 அபராதம்
காலாவதி 'சாக்லேட்' விற்பனை கடைக்காரருக்கு ரூ.20,000 அபராதம்
காலாவதி 'சாக்லேட்' விற்பனை கடைக்காரருக்கு ரூ.20,000 அபராதம்
ADDED : செப் 08, 2024 12:18 AM
சென்னை, 'காலாவதியான சாக்லேட் விற்ற கடைக்காரர் 20,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொருக்குப்பேட் டையைச் சேர்ந்த தேவபிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனு:
வண்ணாரப்பேட்டை, தெலுங்கு தெருவில் உள்ள 'ஸ்ரீ அம்மன் டிரேடர்ஸ்' என்ற கடையில், 2021 ஜூலை 17ல், இரண்டு பாக்ஸ் 'ஸ்டிக் ஆன் சாக்கோ' என்ற சாக்லேட் வாங்கினேன்.
மறுநாள் என் குழந்தைக்கும், சர்ச்சில் உள்ள குழந்தைகளுக்கும் கொடுத்தேன். சாக்லேட்டுகளை சாப்பிட்ட குழந்தைகளுக்கு, திடீரென குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.
சாக்லேட்களை வாங்கி பார்த்தபோது, அவை செப்., 2020ல் தயாரிக்கப்பட்டது. ஒன்பது மாதங்கள் வரை, அந்த சாக்லேட்டுகளை உண்ணலாம். ஆனால், சாக்லேட் காலாவதியாகி ஒரு மாதமானது ெதரிய வந்தது.
நியாயமற்ற வணிகத்தில் ஈடுபட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
புகார்தாரர், கடையில் பொருளை வாங்கவில்லை; 'பில்' போலியானது எனக் கூறுவதை நிரூபிக்க, போதிய ஆதாரங்களை கடையின் உரிமையாளர் தாக்கல் செய்யவில்லை.
அதேநேரம், காலாவதி சாக்லேட் என்பது உறுதியாகி உள்ளது. அதனால் ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு, சிகிச்சை பெற்ற மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என்பதையும் ஏற்க முடியாது.
எனவே, சேவை குறைபாடு, நியாயமற்ற வணிக நடைமுறைக்கு, கடைக்காரர் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். உத்தரவை செயல்படுத்த வேண்டும். இல்லை எனில், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.