/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மிக்ஜாம்' புயலால் துாண்டில் வளைவு சேதம் சீரமைப்புக்கு ரூ.26 கோடி எதிர்பார்ப்பு
/
'மிக்ஜாம்' புயலால் துாண்டில் வளைவு சேதம் சீரமைப்புக்கு ரூ.26 கோடி எதிர்பார்ப்பு
'மிக்ஜாம்' புயலால் துாண்டில் வளைவு சேதம் சீரமைப்புக்கு ரூ.26 கோடி எதிர்பார்ப்பு
'மிக்ஜாம்' புயலால் துாண்டில் வளைவு சேதம் சீரமைப்புக்கு ரூ.26 கோடி எதிர்பார்ப்பு
ADDED : ஆக 27, 2024 12:05 AM
சென்னை, 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட துாண்டில் வளைவுகள் பாதிப்பை புனரமைக்க, அரசிடம் 26 கோடி ரூபாயை எதிர்பார்த்து, நீர்வளத்துறை காத்திருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை, 2023 டிசம்பரில் 'மிக்ஜாம்' புயல் தாக்கியது. இதனால் எண்ணுார், எர்ணாவூர், திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடல் அரிப்பு ஏற்பட்டது.
கடல் அரிப்பை தடுக்க பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட துாண்டில் வளைவுகளின் முகப்பு பகுதிகளும், கடுமையாக சேதமடைந்தன. இதை சீரமைப்பதற்கு, 26 கோடி ரூபாய் தேவை என, நீர்வளத்துறை மதிப்பீடு தயார் செய்து உள்ளது.
ஆனால், இப்பணிகளுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை. நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, மெரினா நேப்பியர் பாலம் அருகே கூவம் முகத்துவாரத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், எண்ணுார் முகத்துவாரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. புயல் உருவாகும்பட்சத்தில், ஏற்கனவே சேதமடைந்துள்ள துாண்டில் வளைவு முகப்பு பகுதிகள் மேலும் சேதமடையும் வாய்ப்புள்ளது. இதனால், கடல் அரிப்பு பாதிப்பும் ஏற்படும்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துாண்டில் வளைவுகளை சீரமைக்க வேண்டும். பருவமழை துவங்குவதற்கு ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருப்பதால், அதற்குள் பணிகளை முடிக்க வேண்டும்.
மேலும், கடல் சார்ந்த வல்லுனர்கள் குழுவின் பரிந்துரைகளையும் பெற வேண்டும்.
ஆனால், ஏற்கனவே நடந்துவரும் பணிகளை காரணம் காட்டி, இந்த பணிகளுக்கு நிதி மறுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாததால், சென்னையின் பல பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகிஉள்ளது.
இதனால், நிதியை எதிர்பார்த்து நீர்வளத் துறையினர் காத்திருக்கின்றனர். இனிமேல் நிதி கிடைத்தாலும், முழுமையாக பணிகளை முடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

