/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3.89 கோடி மோசடி வழக்கு; ஸ்வர்ணதாரா தலைவர் கைது
/
ரூ.3.89 கோடி மோசடி வழக்கு; ஸ்வர்ணதாரா தலைவர் கைது
ரூ.3.89 கோடி மோசடி வழக்கு; ஸ்வர்ணதாரா தலைவர் கைது
ரூ.3.89 கோடி மோசடி வழக்கு; ஸ்வர்ணதாரா தலைவர் கைது
ADDED : மே 30, 2024 05:17 AM

வேப்பேரி : ஸ்வர்ணதாரா குழுமத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி, 86 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட, நிறுவனத்தின் தலைவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:
ஸ்வர்ணதாரா குழுமத்தினர், 2015ல் என்னை அணுகி, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 சதவீதம் லாபத் தொகையை ஆண்டுதோறும் கொடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பின் முதலீடு செய்த முழுத்தொகையை கொடுத்து விடுவதாக கூறினர். இதை நம்பி, மூன்று லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். முதல் மூன்றாண்டு வாக்குறுதி அளித்தபடி பணத்தை கொடுத்தனர்.
இதனால், என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நண்பர்கள், உறவினர்கள் என, 61 பேர் இந்த நிறுவனத்தில், 2.40 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். அதேபோல் சுப்பையா என்பவரும், 25 நபர்களை நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தார். வாக்குறுதி அளித்தபடி ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் வெங்கடரங்க குப்தா, 58, லாபத்தையும், முதலீடு செய்த பணத்தையும் திருப்பித் தராமல் அலைக்கழித்து வருகிறார். எனவே, இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் பிரசித் தீபா தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் வெங்கடரங்க குப்தா, 86 பேரிடம் இருந்து, 3.89 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து அவரையும் ஸ்வர்ணதாரா குழுமத்தின் நிர்வாகிகள் ஆறு பேரையும் நொளம்பூரில் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.50 லட்சம் ரூபாய், 44 சவரன் தங்க நகை, வைர நகைகள், இரண்டு சொகுசு கார்கள், வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பாராட்டினார்.