/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் வசூல் மழை! காஞ்சியில் அடுத்தடுத்து 13 பேர் கைதாகியும் பயமில்லை
/
அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் வசூல் மழை! காஞ்சியில் அடுத்தடுத்து 13 பேர் கைதாகியும் பயமில்லை
அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் வசூல் மழை! காஞ்சியில் அடுத்தடுத்து 13 பேர் கைதாகியும் பயமில்லை
அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம் வசூல் மழை! காஞ்சியில் அடுத்தடுத்து 13 பேர் கைதாகியும் பயமில்லை
ADDED : மே 30, 2024 11:58 PM

காஞ்சிபுரம், : அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், இரு ஆண்டுகளில் லஞ்சம் வாங்கும் போது சிக்கி, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், மாநகராட்சி, தாலுகா உள்ளிட்ட அலுவலகங்களில், லஞ்சம் வாங்குவது தடுக்க முடியாததாகவே உள்ளது.
தாலுகா, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி, கோட்டாட்சியர், நகர ஊரமைப்பு, சார் - பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், லட்சக்கணக்கில் பணம் புழங்கும் இடங்களாக மாறிவிட்டன.
இவற்றில், அதிகாரிகள் முதல் இடைத்தரகர்கள் வரை பலரும் புகுந்து விளையாடுகின்றனர். லஞ்சம் கேட்பதால் வெகுண்டு எழும் சொற்ப பேர் மட்டுமே அளிக்கும் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து, கையும் களவுமாக அதிகாரிகளை கைது செய்கின்றனர். அதிலும், சிலர் தப்புகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022 ஜூன் முதல் 2024 மே வரையிலான இரு ஆண்டுகளில் மட்டும், ஏழு வழக்குகளில், ஒரு ஊராட்சி தலைவர் மற்றும் 12 அரசு ஊழியர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2023ல் மட்டும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
2022 ஜூன் மாதம், குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், பட்டா மாற்றம் செய்ய 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்
2023 பிப்ரவரியில், சிறுகாவேரிப்பாக்கம் ஆட்டோமொபைல் துறை உதவி பொறியாளர் மோகன், பணிமனை அலுவலர் முரளி ஆகிய இருவரும், மெக்கானிக் ஷாப் அனுமதி வழங்க 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டனர்
2023 மார்ச்சில், அய்யங்கார்குளம் ஊராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க ஊராட்சி தலைவர் வேண்டா, ஊராட்சி செயலர் புவனா ஆகியோர் 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கினர்
2023 ஆகஸ்டில், அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், கிராம உதவியாளர் கவியரசு ஆகிய இருவரும், பட்டா மாற்றம் செய்ய 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டனர்
2023 ஆகஸ்டில், காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரம் ரத்து செய்ய, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, உதவியாளர் நவீன், பணியாளர் சந்தோஷ் ஆகிய இருவர் கைதாகினர்
2023 ஆகஸ்டில், காஞ்சிபுரம் மாநகராட்சி வரி விதிப்பு அலுவலர் ரேணுகா, வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்
2024 ஜனவரியில், வீடு கட்ட அனுமதி வழங்க 24,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, குன்றத்துார் நகராட்சி கமிஷனர் குமாரி, நகரமைப்பு அலுவலர் பாலசுப்ரமணி, உதவியாளர் சாம்சன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனராக பணியாற்றி வந்த பழனி, வருமானத்திற்கு அதிகமாக 1.80 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவர் மீது கடந்த 14ம் தேதி வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அதேபோல், காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சர்வே ஆய்வாளர் பாஸ்கர் தற்போது ஊட்டியில் பணியாற்றி வருகிறார். இவர், வருமானத்திற்கு அதிகமாக 2.9 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கடந்த 21ம் தேதி வழக்குப்பதிவு செய்து, அவரது வீடு, உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர்.
ஒரே மாதத்தில், இரு அரசு அதிகாரிகள் மீது சொத்து குவிப்பு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர் நடவடிக்கை இருந்தும், அரசு அதிகாரிகள், பயமின்றி லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே, இவ்வகை குற்றம் அதிகம் நடப்பதாக, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறினர்.
அரசு அலுவலகங்களில், அரசின் சேவை பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற மன நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.