/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை பறிமுதல்... ரூ.30 கோடி! தேர்தல் நெருங்குவதால் பறக்கும் படை கெடுபிடி
/
சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை பறிமுதல்... ரூ.30 கோடி! தேர்தல் நெருங்குவதால் பறக்கும் படை கெடுபிடி
சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை பறிமுதல்... ரூ.30 கோடி! தேர்தல் நெருங்குவதால் பறக்கும் படை கெடுபிடி
சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை பறிமுதல்... ரூ.30 கோடி! தேர்தல் நெருங்குவதால் பறக்கும் படை கெடுபிடி
ADDED : ஏப் 09, 2024 12:21 AM

சென்னை, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாள் அடுத்த வாரம் உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்ளுக்கு பணம் பட்டுவாடா, பொருட்கள் வழங்குவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கெடுபிடி காட்ட துவங்கியுள்ளனர். சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை, 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, 50,000 ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்ய, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், மூன்று பறக்கும் படை குழு, மூன்று நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும் படை குழுவில், இரண்டு போலீசார், தலா ஒரு வருவாய்த் துறை அதிகாரி, போட்டோகிராபர், ஓட்டுனர் என, ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிலையான கண்காணிப்பு குழுவிலும் இதே எண்ணிக்கையிலான அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
சட்டசபை தொகுதியில் உள்ள பறக்கும் படை குழுவினர், வாகன தணிக்கை, பொருட்கள் பதுக்கல், பணம் வினியோகம் உள்ளிட்டவற்றை, தொகுதி முழுதும் கண்காணிக்க வேண்டும்.
சுங்கச்சாவடி, முக்கிய சாலை சந்திப்புகளில், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில், பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க முயன்ற மூன்று பேரிடம், 3.99 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்பணத்தை திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேரந்தினுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த அப்பணம், சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து, மின்சார ரயில் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக, தாம்பரம் வரை எடுத்துச் செல்லப்பட்டது, போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பல இடங்களில், கார், வேன் மட்டுமின்றி, ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு கெடுபிடி காட்டி வருகின்றனர்.
தென்சென்னை தொகுதியில், இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வேனை மடக்கி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். வாகனத்தில் இருந்த பிரின்ஸ், 28, என்பவர், டாஸ்மாக் கடை நடத்தி வருவதாகவும், மதுபானங்கள் விற்ற 1.63 கோடி ரூபாய் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடை விற்பனை பணத்தை, ஏஜென்ட் நிறுவனம் வாயிலாக வங்கியில் செலுத்தப்படும். ஆனால், பணத்தை கையாள தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால், அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சவுகார்பேட்டையை சேர்ந்தவர் விக்ரம் சிங், 30. இவர் பாரிமுனையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். அவரது இருசக்கர வாகனத்தில் 1.22 லட்சம் ரூபாய் உரிய ஆவணமில்லாமல் கொண்டு எடுத்துச் செல்லப்பட்டதை அறிந்து, அதை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை குளக்கரை பகுதியில், பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த சங்கர் என்பவரிடமிருந்து ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோன்று, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், பல்வேறு இடங்களில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
அதனால் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்தது முதல் நேற்று முன்தினம் வரை, சென்னை மாவட்டத்தில் மட்டும், 12.70 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வாகனங்களில் அனுமதியில்லாமல் எடுத்துச்சென்ற, 8.20 கோடி ரூபாய், நேற்று முன்தினம் வரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 9.94 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நாள் அடுத்த வாரம் நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வினியோகம் சூடுபிடிக்கும் என்பதால், கண்காணிப்பு, வாகன சோதனையை தீவிரப்படுத்த, பறக்கும் படை குழுவினர் கெடுபிடி காட்டி வருகின்றனர்.
ஆவணம் அவசியம்
கோயம்பேடு போன்ற சந்தை பகுதி வியாபாரிகள், 1 லட்சம் ரூபாய் எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் இருந்தால், இரண்டு தவணைகளில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். மேலும், பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய கணக்கு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் உரியவர்களிடம் அவை ஒப்படைக்கப்படுகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களுடன் பொருட்கள் மற்றும் பணத்தை, வியாபாரிகள், பொதுமக்கள் கொண்டு செல்லும்பட்சத்தில், பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ய மாட்டார்கள்.
- மாவட்ட தேர்தல் அதிகாரிகள்

