/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு? வாரிய அதிகாரிகள் விளக்கம்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு? வாரிய அதிகாரிகள் விளக்கம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு? வாரிய அதிகாரிகள் விளக்கம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பு? வாரிய அதிகாரிகள் விளக்கம்
ADDED : ஜூன் 11, 2024 12:29 AM
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 196, 198, 199, 200 ஆகிய வார்டுகள் மற்றும் அதை ஒட்டி உள்ள பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள, 25,000 வீடுகளுக்கு, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டது.
பத்து நாட்களாக, 199, 200வது வார்டு மற்றும் வாரிய குடியிருப்புக்கு வீராணம் குடிநீர் வழங்கப்படுகிறது. வீராணம் குடிநீர், கேளம்பாக்கம் நீரேற்று நிலையத்தில் சேமிக்கப்படும். அங்கிருந்து, ஓ.எம்.ஆர்., மற்றும் ஜி.எஸ்.டி., சாலை வழியாக போரூர் செல்கிறது.
ஓ.எம்.ஆரில் வழங்கப்படும் வீராணம் குடிநீரில், கழிவுநீர் கலப்பதாக செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியினர் புகார் தெரிவித்தனர். மழைநீர் வடிகால் பள்ளம் தோண்டும்போது குழாய் உடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் கலந்ததாக கூறப்பட்டது.
உடைந்த குழாயும் சரி செய்யப்பட்டது. இருந்தும் குடிநீரில் துார்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. குடிநீர் வாரிய அதிகாரிகள் சோதனை செய்தபோது, கழிவுநீர் கலக்கவில்லை என தெரிந்தது. மேலும், வாரிய கீழ்நிலை தொட்டிகள் மற்றும் மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கேளம்பாக்கத்தில் இருந்து ஓ.எம்.ஆர்., வரும் குடிநீரையும், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் கீழ்நிலை தொட்டியில் விழும் குடிநீரையும் ஆய்வுக்கு அனுப்பினோம். அதில், 440 டி.டி.எஸ்., அளவு இருந்தது. இது, குடிக்கும் தன்மை கொண்டது.
கடல்நீரை சுத்திகரித்து வழங்கும் குடிநீர் அதிக வெண்மையாக தெரியும். ஏரி குடிநீர், சற்று மங்கலாக தெரியும். இதனால், பாதிப்பு ஏதும் இல்லை.
துர்நாற்றம் வீசுவது தொடர்பாக, வாரிய வீடுகளில் வரும் குடிநீரை ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். இதில் பிரச்னையின் உண்மைநிலை தெரிந்து விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

