/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை பணி: மதனந்தபுரம் சாலை மூடல்
/
பாதாள சாக்கடை பணி: மதனந்தபுரம் சாலை மூடல்
ADDED : ஆக 05, 2024 01:04 AM

குன்றத்துார், குன்றத்துார் - போரூர் நெடுஞ்சாலை, பரங்கிமலை - பூந்தமல்லி சாலையை இணைக்கும் வகையில், மதனந்தபுரம் - - முகலிவாக்கம் சாலை உள்ளது.
இந்த சாலையில், 2019ல் துவங்கிய பாதாள சாக்கடை திட்ட பணி இன்னும் முடியாமல் மந்தகதியில் நடக்கிறது. தற்போது மதனந்தபுரத்தில், இப்பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் அந்த தடத்தில், இருசக்கர வாகன போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
போரூர் அல்லது கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் வழியே, மாற்றுவழியில் மணப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளுக்கு செல்லலாம்.
பூந்தமல்லி சுற்றுப்பகுதியில் ஏற்கனவே, மெட்ரோ ரயில் பணி நடப்பதால் பூந்தமல்லி - பரங்கிமலை சாலை, குன்றத்துார் சாலை, கெருகம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
அதனால், மதனந்தபுரம், முகலிவாக்கம் வழியாக, வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். இந்நிலையில், பாதாள சாக்கடை பணியால் வாகன ஓட்டிகள், போரூர் சென்று பூந்தமல்லி சாலைக்கு செல்வதால் நெரிசல் அதிகரித்துள்ளதோடு, 3 கி.மீ., சுற்றிச் செல்ல நேரிடுகிறது.
மதனந்தபுரம் - முகலிவாக்கம் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.