செங்கல்பட்டு நகராட்சி பகுதிக்கு, திருவள்ளூர் மாவட்டம், காக்களுர் பகுதியில் இருந்து, ஆரஞ்சு கலர் ஆவின் பால் வழக்கமாக வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, லாரியில் வந்த 1,200 ஆரஞ்சு காலர் ஆவின் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போனது. இதனால், வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மதுராந்தகம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி உள்ளிட்ட நகராட்சி பகுதிகளிலும் ஆவின் பால் வினியோகம் தாமதமாகி உள்ளது.
மாமல்லபுரத்தில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்ட ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் கெட்டுப்போயிருந்தது. காக்களூரில் இருந்து வரும் பால் பாக்கெட்டுகளே, அடிக்கடி கெட்டுப் போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆவின் பால் முகவர் கே.பச்சையப்பன் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளாக ஆவின் பால், முகவராக இருந்து வருகிறேன். தினமும், 100 லிட்டர் பால் பாக்கெட் வாங்கி, வீடுகளுக்கு வினியோகம் செய்து வருகிறேன். திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று, காஞ்சிபுரத்திற்கு வந்த, 2,000 லிட்டர் ஆரஞ்சு பிரீமியம் பாலும் கெட்டுப்போனதால், அதை வாங்கிய வாடிக்கையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இவ்வாறு அவர் கூறினார்.

