ADDED : செப் 10, 2024 12:25 AM
எம்.ஜி.ஆர்., நகர்,
சென்னை மாவட்டத்திலுள்ள 84 பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த 4,371 மாணவர்கள், உயர் கல்வி தொடராமல் உள்ளனர்.
இதில், மத்திய சென்னை வட்டத்திற்கு உட்பட்ட 42 பள்ளிகளில், 2022 -- 2023ல் 1,184 மாணவர்கள், 2023 - 2024ம் கல்வியாண்டில் 877 என, மொத்தம் 2,061 மாணவர்கள் உயர் கல்வி தொடராமல் உள்ளனர்.
இதையடுத்து, மத்திய சென்னை வருவாய் வட்டத்திலுள்ள 42 பள்ளி மாணவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா பிரதான சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 'உயர்வுக்கு படி' என்ற ஆலோசனை முகாம், நேற்று நடந்தது.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் நடந்த இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பல மாணவியர் திருமணம் முடிந்தும், நிறைமாத கர்ப்பிணியாக வந்திருந்தனர்.
இதில், அரசு கல்லுாரிகள், ஐ.டி.ஐ., அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன், தேவையான சான்றிதழ்கள் வழங்க, வருவாய் துறை சார்பில் இ - சேவை மையமும், கல்விக்கடன் பெற வங்கி நிர்வாகிகள் அரங்குகளும் அமைத்திருந்தனர்.
முகாமில், ஆர்.டி.ஓ., முருகன், மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி மார்ஸ், திறன் மேம்பாட்டு கழகம் இணை இயக்குனர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், கல்வி முதன்மை அதிகாரி மார்ஸ் பேசியதாவது:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரிகளில், இன்னும் இடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதே பள்ளியில் அடுத்த 19ம் தேதி, மீண்டும் முகாம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
