ADDED : மே 10, 2024 11:55 PM
எண்ணுார், எண்ணுார், நேரு நகரில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு, தரை மற்றும் வான் வழியாக, மின் ஒயர் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், வெயில் காலம் துவங்கியது முதலே, அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே, மூன்று நாட்கள், நள்ளிரவில் தொடர் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இது குறித்து, மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தால், அலட்சியம் காட்டுவதாக கூறி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 100க்கும் மேற்பட்டோர், எண்ணுார் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணுார் போலீசார், அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். மின்வாரிய அதிகாரிகள் வந்து விளக்கம் அளித்தால் மட்டுமே, கலைவோம் என, அவர்கள் கூறினர்.
பின், மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, மின் தடை பிரச்னைக்கு தீர்வு காணப்படுமென போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்தனர்.